இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் சக்திவேல், ராஜ்குமார் ஆகிய இருவரும் எல்லை தாண்டி இந்திய கடல் பகுதிக்குள் மீன் பிடித்த குற்றத்திற்காக 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான மீனவர்களின் பதினான்கு மாத தண்டனைக் காலம் முடிந்தும், உரிய ஆவணங்கள் இல்லாததால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.
தகவல் அறிந்த சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையச் செயலாளர் ஜெயந்தி, இலங்கை துணை தூதரகத்தின் உதவியுடன் ஆவணங்கள் தயார் செய்து இரண்டு பேரையும் இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.
அதன்படி இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்த மீனவர்கள் இருவரும் செய்தியாளர்களிடம், "எங்கள்மீது தொடுக்கப்பட்ட வழக்கு பொய்யானது, வழக்கின் உண்மையை எடுத்துக் கூறியபின் எங்களை அக்டோபர் 18ஆம் தேதி விடுதலை செய்தனர். நாங்கள் நாடு திரும்புவதற்கு உரிய ஆவணங்களை தயார் செய்து கொடுத்த சட்டப்பணி ஆணையச் செயலாளர் ஜெயந்தி அவர்களுக்கு நன்றி" என்றனர்.
இதையடுத்து அவர்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: புதுகை மீனவர்கள் 3 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படையினர் அத்துமீறல்