தூத்துக்குடி: இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். இதனை தடுக்க இந்திய பாதுகாப்பு படை, கடலோர காவல் படை, உளவுத் துறை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
அதேபோல் தூத்துக்குடியில் இருந்து போதைப் பொருள், விவசாய விளைப் பொருள்கள், மருந்து, விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்துவதை தடுக்கும் பணியில் கியூ பிரிவு, மரைன் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் கடலோர காவல் படையினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த இந்திய கடலோர காவல் படையினர் ஐ.சி.ஜி.எஸ். ஆதேஷ் என்ற ரோந்து கப்பலில் உதவி கமெண்டர் நீரஜ் வர்மா, துணை கமாண்டர் கிருஷ்ணன் தலைமையில், நேற்று (மார்ச். 21) மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, இந்திய கடல் பகுதியான, கன்னியாகுமரியில் இருந்து சுமார் 80 கடல் மைல் தொலைவில் இலங்கையைச் சேர்ந்த படகில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக கடலோர காவல் படையினர் விரைந்து சென்று, அந்த படகை மடக்கி பிடித்தனர்.
அப்போது, அந்த படகில் இலங்கை கொழும்பு, பெருவளை பகுதியை சேர்ந்த முகமது ரசாத், நுவான், பத்திரங்கே ருவன் ஜெயலால், மதுரங்க சைமன்மேரு, முகமது ரஹ்மான், ஆகிய 6 மீனவர்கள் இருந்தது தெரிய வந்தது. பின்னர், இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக 6 இலங்கை மீனவர்களை கைது செய்த கடலோர காவல் படையினர், படகையும் பறிமுதல் செய்தனர்.
படகு மற்றும், 6 மீனவர்களை கடலோர காவல் படையினர், தூத்துக்குடி தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட 6 பேரிடம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் 6 இலங்கை மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெரும்பாலும் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த 6 பேரை தமிழக கடலோர காவல் படையினர் கைது செய்து உள்ளனர்.
இதற்கு முன் கடந்த ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் காக்கிநாடா பகுதியில் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 11 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 500 கிலோ மீன் மற்றும் இரு மீன் பிடி படகுகளை கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையும் படிங்க: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு கவிதா மீண்டும் ஆஜர்?