சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் இருந்து பிட்ஸ் ஏர் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் காலை 10.45 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கையின் கொழும்பு நகரைச் சேர்ந்த ரமலான் சலாம் (33), அவருடைய மனைவி, மகன், மகள் ஆகிய 4 பேர் இந்த விமானத்தில் கொழும்பிலிருந்து சென்னை வந்தனர். அப்போது, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அவர்களது பாஸ்போர்ட், ஆவணங்களை பரிசோதித்தனர். இந்திய பாஸ்போர்ட்டை ரமலான் சலாமும், அவருடைய குடும்பத்தினரும் வைத்திருந்தனர்.
இலங்கையைச் சேர்ந்த இவர்களுக்கு இந்திய பாஸ்போர்ட்கள் எவ்வாறு வந்தது என்று குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ரமலான் சலாம், கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து அகதியாக தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும், அதன் பின்பு இலங்கைக்கு திரும்பிச் செல்லாமல், சென்னை வண்டலூர் அருகே தங்கியிருந்ததாகவும், அப்போது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பேன் கார்டு போன்றவைகளை பெற்றதாகவும் கூறியுள்ளார்.
அதோடு அவைகள் மூலமாக இந்திய பாஸ்போர்ட் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பெற்றதாக தெரிவித்தார். மேலும், இந்த பாஸ்போர்ட் வாங்கும்போது முறைப்படி வண்டலூர் ஓட்டேரி போலீஸ் நிலைய வெரிஃபிகேஷன் நடந்து, அதன் பின்புதான் தங்கள் குடும்பத்தினருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால் குடியுரிமை அதிகாரிகள், ரமலான் சலாம் விளக்கத்தை ஏற்ற மறுத்து, “நீங்கள் இந்தியாவில் தற்போது வசித்து வந்தாலும், நீங்கள் இலங்கை பிரஜைகள்தான். எனவே இந்திய அரசை ஏமாற்றி, இந்திய பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துள்ளீர்கள்” என்று கூறினர்.
அதோடு சலாம் மற்றும் அவருடைய குடும்பத்தினரை வெளியில் விடாமல், குடியுரிமை அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர். மேலும் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், அவர்களுடைய உயர் அதிகாரிகளிடமும், டெல்லியில் உள்ள தலைமை குடியுரிமை அலுவலகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றோடும் ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்பு ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தனிப்படையினர், சென்னை விமான நிலையம் வந்து விசாரணை நடத்தினர்.
அதோடு ரமலான் சலாம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து, போலி ஆவணங்கள் மூலம், போலியான இந்திய பாஸ்போர்ட் வாங்கி, அதன் மூலம் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு குடும்பமாக பயணித்து வந்ததாக குற்றம் சாட்டி, 4 பேரையும் கைது செய்தனர். அதோடு அவர்களை மேல் விசாரணைக்காக சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி திருவிழா: மாவட்ட நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!