சென்னை: தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலி வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோக்களை பரப்பிய நபர்களை தமிழக போலீசார் கண்டறிந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்படி, தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாகவும், கொல்லப்பட்டதாகவும் 30 போலி வீடியோக்கள் பரப்பப்பட்ட விவகாரத்தில், பீகாரைச் சேர்ந்த யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மணிஷ் காஷ்யப் பீகார் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட போலீசார் பதிவு செய்திருந்த வழக்கில், பீகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை மதுரை மாவட்ட போலீசார் கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வந்து மதுரை சிறையில் அடைத்தனர்.
தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் போலி வீடியோ பரப்பிய யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில், வட மாநில தொழிலாளர் குறித்து போலி வீடியோ பரப்பியது தொடர்பாக பெருங்குடியை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் அளித்த புகாரில், யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது நீலாங்கரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் மணிஷ் காஷ்யப்பை நீலாங்கரை போலீசார் இன்று (ஏப்.12) கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மணிஷ் காஷ்யப்பை போலீஸ் காவல் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மணிஷ் காஷ்யப் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்பு சட்டம் - மதுரை எஸ்பி சிவபிரசாத் தகவல்