சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் மூன்றாவது அடித்தளத்தில் கடந்த நவம்பர் மாதம் கழிவுநீர் சுத்தம் செய்யும்போது துப்புரவுப் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல், முகப்பேரில் நீர் உறிஞ்சி கிணற்றுப் பணியின்போது தொழிலாளர்கள் வெல்டர் மற்றும் அவரின் உதவியாளர் விபத்தில் உயிரிழந்தனர். இத்தொழிலாளர்கள் மரணம் தொடர்பாக தேசிய துப்புரவுப் பணியாளர் ஆணையர் ஜெகதீஷ் ஹிர்மானி, காவல்துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.
இதனையடுத்து தற்போது விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களுக்கு 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது என துப்புரவு பணியாளர் ஆணையர், காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தனியார் வணிக வளாகத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டு அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தில் இருவருக்கு அங்கே வேலை வழங்கவும் உத்தரவிட்டார். பின்னர் சம்மந்தப்பட்ட இடங்களில் குடிநீர் வாரிய பொறியியல் இயக்குநர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்போது, முகப்பேர் பகுதியில் உயிரிழந்த வெல்டர் அவரின் உதவியாளர் துப்புரவுப் பணியாளர்கள் அல்ல என்றும் தெரியவந்தது.
இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஒப்பந்ததாரர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து குடிநீர் வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துப்புரவுப் பணியாளர்கள் மூலம் கழிவு நீர் சுத்தம் செய்யப்படுவதில்லை, அதற்கான இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனவும் இயக்குநர் தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் விழிப்புணர்வினை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனவும் ஆணையர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முகப்பேரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் ஆணையர் ஜெகதீஷ் ஹிர்மானி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்: இருவர் கவலைக்கிடம்