மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி ஊரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (46). இவர் தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை அவருக்குச் சொந்தமான (ஐஎன்டி- டிஎன் 16 எம்எம் 1793 என்ற பதிவு எண் கொண்ட) விசைப்படகில், அவர் உட்பட தரங்கம்பாடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ரவி, பாலையா, வராஜா, சேகர், தமிழ்செல்வம் மற்றும் குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பாலு, வேல் (எ) பழனிவேல், சுபாஷ் ஆகிய 9 மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார்.
அப்போது, அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரைக்கு கிழக்கே இரவு 11:30 மணிக்கு 11 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். குட்டியாண்டியூரைச் சேர்ந்த மீனவர் வேலு என்கிற பழனிவேல் (45) விசைப்படகில் இருந்து தவறி கடலில் விழுந்துள்ளார்.
பின்னர் அவரைக் காணவில்லை. மாயமான மீனவர் பழனிவேலை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தரங்கம்பாடி மீனவர்கள் தங்களது படகுகளில் சென்று தேடினர். இரவு நேரத்தில் தேடுதல் பணியைத் தொடர முடியாத நிலையில், இன்று அதிகாலை முதல் கடலோர காவல் படை மற்றும் கடலோர காவல் நிலைய போலீசார் பழனிவேலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: “தெலுங்கு மன்னர்கள் படம் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும்”.. கஸ்தூரி மீது தேனியில் பெண்கள் புகார்!
இந்நிலையில் நேற்று குட்டியாண்டியூர் சென்று மாயமான மீனவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் நம்பிக்கை கூறி ஆறுதல் தெரிவித்தார். அப்போது, திமுக தகவல் தொழில்நுட்ப தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர்.
இதேப்போல் தகவலை அறிந்த மயிலாடுதுறை அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.பவுன்ராஜ் கடலில் மீன்பிடிக்கும் போது காணாமல் போன குட்டியாண்டியூர் மீனவ கிராமத்திற்குச் சென்று பழனிவேல் குடும்பத்தினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.ஜி.கண்ணன், தரங்கம்பாடி பேரூர் கழக செயலாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட கழக பொருளாளர் செல்லத்துரை மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்