சென்னை பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் அலுவலகம் முன்பு தையல், ஓவியம், இசை ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்று இன்னும் பணி நியமனம் வழங்கப்படாததைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் அமைச்சர் செங்கோட்டையன் படத்தையும் கையில் வைத்திருந்தனர்.
சிறப்பாசிரியர்களுக்கான உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் 1,300 பேரை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வினை 30 ஆயிரம் பேர் எழுதினர். அவர்களில் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் 2018ஆம் ஆண்டு வெளியிட்டது. ஆனால், இதுவரை அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை.
எனவே, தங்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டி பல்வேறு முறை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளோம். ஆனால், இதுவரை பணி வழங்கவில்லை. இந்த முறையாவது பணி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.