சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஜூலை 5ஆம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வரவுள்ளன. இதை முன்னிட்டு மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் இன்று (ஜூலை.3), ஆலோசனை கூட்டம் நடந்தது.
வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை
சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், வணிக சங்கங்களுக்கு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,
"தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்துவருகிறது. இதனை முழுமையாக கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். வணிகர் சங்கம், மீனவர் சங்கங்களிடையே ஆலோசனை நடத்தினோம்.
உயர் கோபுர கண்காணிப்பு
சென்னையில் 20 இடங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடுகின்றனர். அங்கு பொதுமக்களுக்கு தொற்று பாதிக்காத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்படும். மீன் வாங்க மக்கள் குவியும் நொச்சிக்குப்பம், வானகரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கும் நுழைவாயிலில் தடுப்புகள் போடப்பட்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படவுள்ளது. சுய கட்டுப்பாடு தான் கரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்கும்" என்றார்.
வியாபாரிகளுக்கு தடுப்பூசி
இது தொடர்பாக பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங், "சென்னையில் உள்ள வியாபாரிகள், கடையில் பணிபுரிபவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடத்த உள்ளோம். நிலையான வழிகாட்டு குழு அமைக்கப்பட்டு பொதுஇடங்களை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஊரடங்கு மண்டல அமலாக்க குழு எண்ணிக்கையை உயர்த்த வாய்ப்புள்ளது.
திருமண மண்டபங்களுக்கு அபராதம்
கோயம்பேடு சந்தையில் உள்ள 18 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பெரிய கடைகளில் ஏ.சி போடாமல் திறக்க அறிவுறுத்தி உள்ளோம். கடைகளுக்கு வெளியே கிருமிநாசினியும், உடல் வெப்ப பரிசோதனை செய்யும் கருவியையும் பொருத்தி வாடிக்கையாளருக்கு உடல் வெப்பநிலை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
மதிய உணவை தகுந்த இடைவெளியுடன் உண்ண உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். திருமண மண்டபங்களை கண்காணித்து வருகிறோம். இதுவரை 21 கல்யாணம் மண்டபங்களில் விதிமுறைகளை மீறியதாக 84 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஒத்துழைப்பு
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) வழிகாட்டுதலை பின்பற்றி மூன்று நாட்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்க திட்டமிட்டுள்ளோம். கரோனா பரிசோதனை மையத்தையும், கரோனா பாதுகாப்பு மையத்தையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு தொடர்ந்து தொடர வேண்டும் என்றால் மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’முடிவுக்கு வருகிறது கரோனா இரண்டாம் அலை’- அமைச்சர் மா. சுப்பிரமணியன்