தமிழ்நாட்டில் தொடரும் கரோனா வைரஸ் தொற்று நோய் சென்னையில் மிகவும் அதிகமாக உள்ளது. இதில் வடசென்னை பகுதிகளில் மாநகராட்சி, சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கிறது.
அதன்படி, திருவொற்றியூரில் 1857 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு 64 விழுக்காடாக பாதிப்பு உயர்ந்துள்ளது. இப்பகுதியில் இறப்பு எண்ணிக்கை 2.29 விழுக்காடாக அதிகரித்து 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணலியில் 920 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு 69 விழுக்காடாக பாதிப்பு உயர்ந்துள்ளது. இப்பகுதியில் இறப்பு எண்ணிக்கை 1.13 விழுக்காடாக அதிகரித்து 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாதவரத்தில் 1,599 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, 68 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இப்பகுதியில் இறப்பு எண்ணிக்கை 1.37 விழுக்காடாக அதிகரித்து 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
தண்டையார்பேட்டையில் 6,315 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டு 79 விழுக்காடாக பாதிப்பு உயர்ந்துள்ளது. இப்பகுதியில் இறப்பு எண்ணிக்கை 2.12 விழுக்காடாக அதிகரித்து, 170 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராயபுரத்தில் 7,626 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டு 81 விழுக்காடாக பாதிப்பு உயர்ந்துள்ளது. இப்பகுதியில் இறப்பு எண்ணிக்கை 1.72 விழுக்காடாக அதிகரித்து 161 பேர் உயிரிழந்துள்ளனர்.
திரு.வி.க.நகரில் 4,327 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டு 72 விழுக்காடாக பாதிப்பு உயர்ந்துள்ளது. இப்பகுதியில் இறப்பு எண்ணிக்கை 1.96 விழுக்காடாக அதிகரித்து 117 பேர் உயிரிழந்துள்ளனர்.
அம்பத்தூரில் 2,212 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டு 63 விழுக்காடாக பாதிப்பு உயர்ந்துள்ளது. இப்பகுதியில் இறப்பு எண்ணிக்கை 1.20 விழுக்காடாக அதிகரித்து 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்ணாநகரில் 5,884 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டு, 72 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இப்பகுதியில் இறப்பு எண்ணிக்கை 1.24 விழுக்காடாக அதிகரித்து 104 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு மக்கள் அதிகமாக வாழும் வடசென்னைப் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் தனிக்கவனம் செலுத்தி, நோய்த் தொற்றைத் தடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, மக்களுக்குப் பாதுகாப்பு கவசங்கள் பயன்படுத்துவது, தொற்று பாதிக்காமல் இருக்க இருப்பிடங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது, தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவது , கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வடசென்னை பகுதியைக் கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்கள், நோய் தடுப்புப் பணிகளில் உள்ள அலுவலர்களுக்கு தொடந்து ஆலோசனைகள் வழங்கி வருகின்றார்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் வெளியே வராமல் இருக்க, அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க தன்னார்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், அதனைச் சார்ந்த பகுதிகள், மக்கள் கூடும் பகுதிகள், சாலைகள் , தெருக்களில் நோய்த் தொற்று தடுப்பு மருந்துகள் தெளிக்கப்படுகிறது என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நடவடிக்கைகளால் நோய்த் தொற்று அதிகரிக்காமல் விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர், மாநகராட்சி அலுவலர்கள்.