இந்தியாவில் எங்குமில்லாத அளவிலான முறைகேட்டில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் தனியார் ஊழியர்களாக பலர் தகுந்த பயிற்சி, கல்வித்தகுதி ஆகியவை இல்லாமல் பணியாற்றி வருவதால் தீ விபத்து, மின் ட்ரான்ஸ்பார்மர் வெடிப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று முதல் ஒன்பது மெட்ரோ ரயில் நிலையப் பணிகளில் முற்றிலுமாக தனியார் ஊழியர்களை வைத்து இயக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இதேபோன்று, இன்னும் சில நாட்களில் மேலும் 16 ரயில் நிலையங்களும், பின்னர் ஒட்டுமொத்தமாக 32 ரயில் நிலையங்களிலும் தனியார் ஊழியர்களை பணியமர்த்தும் நோக்கில் மெட்ரோ நிர்வாகம் செயல்பட்டுவருகிறது. ஏற்கனவே, பொதுமக்களின் சேவைக்காக உருவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக உள்ளதால் அனைத்து தரப்பினராலும் பயணிக்க முடியாத சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில், தொழில்நுட்பத்தை முறையாக கற்றுத் தேர்ந்தவர்களை ஊழியர்களாக தேர்வு செய்யப்பட்டு நிர்வகிக்க வேண்டிய மெட்ரோ நிர்வாகமானது, எதுவும் அறியாத வடநாட்டினரை தனியார் நிர்வாகத்தின் மூலம் பணியமர்த்தி வெறுப்புணர்வை உண்டாக்குவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இது மெட்ரோ ரயில் பயணிப்பவர்களுக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்பதே உண்மை, என்று மெட்ரோ தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் இளங்கோவன் கூறுகிறார்.
மொத்தம் ரூ. 60 ஆயிரம் சம்பளத்தில், ரூ. 18 ஆயிரத்தை மட்டும் தனியார் ஊழியர்களுக்கு வழங்கிவிட்டு, மீதியை தனியார் நிறுவனங்கள் எடுத்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். மெட்ரோ நிர்வாகத்தின் இந்த செயலானது ஒட்டுமொத்தமாக மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.