தன் பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தன் பாலின ஈர்ப்பு கொண்டவர்களைக் காவல்துறையினர் தொந்தரவு செய்யக்கூடாது, இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளார், நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன். தங்களுக்கு பாதுகாப்புகோரி இரண்டு தன் பாலின ஈர்ப்பு கொண்ட பெண்கள் தாக்கல் செய்த ரிட் மனுவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் தன் பாலின ஈர்ப்பை (சட்டப் பிரிவு 377) குற்றமற்றது என அறிவித்த பிறகு, வழங்கப்பட்ட மிக முக்கியத் தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.
சட்ட ரீதியாக உரிமைகள் வழங்கப்பட்டாலும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாமல் உள்ளதால் பல நேரங்களில் சமூக புறக்கணிப்பையும், எதிர்ப்பையும் சந்தித்து வருகின்றனர், எல்ஜிபிடி குழுவினர். இவர்களுக்குப் பல இடங்களில் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற உரிமைகள் மறுக்கப்படுகிறன.
சில நேரங்களில் அரசின் அங்கமாக இருக்கும் அலுவலர்களும், காவல்துறையினரும்கூட மாற்றுப் பாலினத்தவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இதுபோன்ற நேரத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
திருநங்கைகள், திருநம்பிகள், தன் பாலின ஈர்ப்பாளர்கள், பாலின ஈர்ப்பு இல்லாதவர்கள் என பலதரப்பட்டவர்கள் இணைந்து தங்களை எல்ஜிபிடி என்ற பெயரில் ஒரு குடையின் கீழ் அடையாளப்படுத்தி வருகின்றனர். கூட்டாக தங்களது உரிமைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.
சட்டப்பாதுகாப்பு, மாறி வரும் காலச் சூழல் போன்றவற்றால் தங்களை (எல்ஜிபிடி) வெளிப்படையாக அடையாளப்படுத்தி வருகின்றனர். இது அவர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க உதவும் என செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், இங்கு பல சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாகக் கூறும் எல்ஜிபிடி செயற்பாட்டாளர் சிவகுமார், பல நேரங்களில் பால் மாறுபாடு கொண்டவர்களைப் புரிந்துகொள்வதிலேயே பிரச்னை உள்ளதாகக் கூறுகிறார். நிறங்கள் எனும் தன்னார்வத் தொண்டு அமைப்பு மூலம் எல்ஜிபிடி சமூகத்தினரின் பாதுகாப்பு, உரிமைகள் போன்றவற்றுக்காக குரல் கொடுத்து வருகிறார், அவர்.
பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளிட்ட தரப்பினருக்கு எல்ஜிபிடியினர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகிறார்.
மாற்றுப் பாலினத்தவர்கள்
மூன்றாம் பாலினத்தவர்கள் எனக் குறிப்பிடுவதே என்னைப் பொறுத்தவரை தவறு என்கிறார், சிவகுமார். தொடர்ந்து பேசிய அவர், "எல்ஜிபிடி சமூகத்தினரை எப்படி அழைக்கிறோம் என்பதிலிருந்தே அவர்களைப் பற்றி புரிதல் தொடங்குகிறது.
ஆண் என்பது முதல் பாலினம், பெண் இரண்டாவது பாலினம், நாங்கள் இவர்களுக்கு அடுத்தபடியானவர்கள் போல சிலர் நினைக்கின்றனர். இந்த இரண்டு வரையறைக்குள் அடங்காதவர்களை மாற்றுப் பாலினத்தவர்கள் என்றே அழைக்க வேண்டும்.
பொதுவாகவே எல்ஜிபிடி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாலியல் தேவை அதிகம் இருப்பது போல ஒரு தவறான எண்ணம் சமூகத்தில் நிலவுகிறது.
இதனால்தான் தன் பாலின ஈர்ப்பு கொண்டவர்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், மற்றவர்களைப் போலேவே அவர்களுக்கும் இயற்கையான பாலியல் தேவை இருக்கிறது.
இது அவர்களை வெறும் உடலுறவில் மட்டும் ஆர்வம் கொண்ட நபர்களாக பார்க்கும் குறுகியப் பார்வை. அவர்களைத் தன் பாலின ஈர்ப்பு கொண்ட ஆண் அல்லது பெண் என அழைப்பதே பொருத்தமாக இருக்கும். எல்ஜிபிடி பொதுவாக அறியப்பட்டாலும் இதில் குயர் (queer) என்ற வார்த்தையும் உள்ளது. தங்களை பாலின ஈர்ப்பு இல்லாதவர்களாகவும், இரு பால் அடையாளம் (gender fluid) கொண்டவர்கள் உள்ளிட்ட அடையாளங்களைக் குறிக்கும் குடைச்சொல்லாகவும் இது இருக்கிறது" என்றார்.
விருப்பத்துக்கு மாறாக கட்டாயத் திருமணம்
சமூகத்தில் அண்மைக்காலத்தில் திருநங்கையர்கள், திருநம்பிகளை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் வந்துள்ளது.
ஆனாலும், தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. சிலர் இதை ஆவேசமாக எதிர்க்கிறார்கள்.
இது பற்றி சிவகுமாரிடம் கேள்வி எழுப்பியபோது, "திருநர்கள் தங்களது அடையாளத்தை மட்டுமே மாற்றிக்கொள்கின்றனர். ஆனால், தன் பாலின ஈர்ப்பு கொண்டவர்களை சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவர்கள், மற்றவர்களையும் தன் பாலின ஈர்ப்பு கொண்டவர்களாக மாற்றிவிடுவார்களோ என்ற அச்சம் ஒரு சிலருக்கு உள்ளது. எங்களைப் போன்ற செயற்பாட்டாளர்கள் நீங்கள்தான் ஏதேதோ பேசி ஒன்றுமறியாத பிள்ளைகளை இப்படி மாற்றிவிட்டீர்கள் என வாதிடுகிறார்கள்.
ஆனால் உண்மையில் ஒருவரது பாலின ஈர்ப்பில் யாராலும் தலையிட முடியாது. யாராலும் மாற்றவும் இயலாது. இதேபோல, சிலர் பெண்களுடேன் படித்து, பழகி, ஆண்களை நெருங்காமல் இருந்தால் தன் பாலின ஈர்ப்பு கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள் எனத் தவறாக நினைக்கிறார்கள். இது உண்மையல்ல.
இதுபோன்ற தவறான புரிதல்களால் எல்ஜிபிடிக்யூ (LGBTQ) சமூகத்தைச் சார்ந்தவர்களை விருப்பத்துக்கு மாறாக கட்டாயம் திருமணம் செய்து வைப்பது, அவர்களின் பாலினத் தேர்வை மாற்ற மனமாற்று சிகிச்சை அளிப்பது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
மாற்றுப் பாலினத்தவர்களை, அவர்களது பாலின ஈர்ப்பை நிராகரித்து, அவர்களின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து வைத்தால் அவர்கள் ஒவ்வொரு நாளும் பாலியல் பலாத்காரத்தை சந்திப்பார்கள். இதுபோன்ற இடங்களில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. குறைந்தபட்சம் தங்கள் குழந்தைகளை அறிந்துகொள்ள அவர்கள் முயற்சிக்க வேண்டும்.
மாற்று பாலின, பாலின ஈர்ப்பைச் சார்ந்தவர்கள் சமீப காலமாக, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், உச்ச நீதிமன்ற 377 சட்டப்பிரிவு குற்றமற்றதென அறிவித்த பின் தங்களது அடையாளத்தை வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர்.
சட்டப் பாதுகாப்பு கிடைத்தாலும் சமூக அங்கீகாரம் கிடைக்காததால், இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். பல இடங்களில் பாலியல் அத்துமீறல்களுக்கும், மிரட்டலுக்கும் ஆளாக வேண்டியுள்ளது. பாதுகாப்பு கொடுக்க வேண்டியே காவல் துறையினரே சில நேரங்களில் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு காரணமாக அமைந்தது, இரண்டு தன் பாலின ஈர்ப்பு கொண்ட பெண்கள் தொடுத்த ரிட் மனு. அவர்கள் முதலில் என்னிடம் மன நல ஆலோசனைக் கேட்டனர்.
தங்களுக்கு குடும்பத்தினர் மூலமாக கடுமையான அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், அச்சுறுத்தப்படுவதாகவும் கூறினர். தங்கள் தனியாக வாழ முடிவு செய்துள்ளதாகவும் கூறி என்னிடம் பாதுகாப்பு கோரினர்.
அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியதற்காக காவல் துறையினர் போலியான அடையாளத்துடன் பேசி, என்னை ஏமாற்றி, சட்டத்துக்கு புறம்பாக கைது செய்து அச்சுறுத்தினர். காவல் துறை வாகனம், சீருடை ஏதுமில்லாமல் எங்களை மிரட்டினர். இதுபோன்ற நிலைதான் மாற்று பாலினத்தவர்களுக்கு ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்.
எல்ஜிபிடி சமூகத்தினரை உரிமைகளை மீட்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். தொண்டு நிறுவனங்களின் சக்தி குறைவானதுதான். அரசு எல்ஜிபிடியினருக்கென பிரத்யேக உதவி எண்னை ஏற்படுத்த வேண்டும்.
அவர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். ஒட்டுமொத்தமாக சமூக மாற்றத்தைக் காண அனைவருக்கும் மாற்று பாலினத்தவர்கள் பற்றி விளக்க வேண்டும். இது இயற்கையானது என்பதை உணர்ந்து, மற்றவர்களைப் போல் எங்களை நாங்கள் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
திரைப்படங்களில் மாற்றுப் பாலினத்தவர்கள் குறித்து சித்தரிப்பும் சமூக மாற்றத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. வடிவேலு நகைச்சுவையில் 'அவனா நீயி' என தன் பாலின ஈர்ப்பாளர்களை கேலி செய்யும் வசனம் பொது சமூகத்தின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.
நம்மில் பலரும் மாற்றுப் பாலினத்தவர்களை கேலி செய்திருப்போம், எள்ளி நகையாடியிருப்போம். ஆனால், நாம் ஏற்கெனவே தவறாக கற்றுக்கொண்டவற்றை மறந்து, நவீன-சமத்துவ கருத்துகளை உள்வாங்குவது அவசியம். பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு, பாலின விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரை எதிர்ப்பதோ, ஒதுக்குவதோ பிற்போக்குவாதம். அதைவிட்டு அனைவரும் ஓரினம் என்பதை உணர வேண்டும். 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்'.
இதையும் படிங்க: பாலின பாகுபாடு, அச்சுறுத்தல்: தேர்தலிலிருந்து விலகிய திருநங்கை வேட்பாளர்!