சென்னையில் உள்ள நாய்கள் பராமரிப்பு கிளப் (கேனியன் கிளப்) நிர்வாக நடவடிக்கைகளில் நிதி முறைகேடுகள் நடந்ததால் அதனை நிர்வகிக்க சிறப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும் எனப் பத்திரப்பதிவுத் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து அந்த கிளப் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்காலத் தடைவிதித்திருந்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அந்த கிளப்பிற்கு மூன்று சிறப்பு அலுவலர்களை நியமனம்செய்ய பத்திரப்பதிவுத் துறை உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிளப் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பத்திரப்பதிவுத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், சென்னை மத்திய பத்திரப்பதிவுத் துறை பதிவாளர் மஞ்சுளாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இருவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா, நீதிமன்ற உத்தரவை மதிக்க மாட்டீர்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, உங்களது நடவடிக்கை முழுக்க முழுக்க நீதிமன்ற அவமதிப்பு எனத் தெரிவித்தார்.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றக் கூடாது என்ற எந்த ஒரு உள்நோக்கமும் அவர்களுக்கு கிடையாது. நியமன உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரே நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து அரசு பிறப்பித்த நியமன உத்தரவு திரும்பப் பெறப்படும் எனவும் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பீலா ராஜேஷ் மீது சொத்து குவிப்பு புகார் - நடவடிக்கை எடுக்க உத்தரவு!