சென்னை: தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது எனவும், வேறு பள்ளிகள் மூலமாக அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று அரசுத்தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன. இந்தத்தேர்வினை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 27 லட்சம் பேர் எழுத இருக்கின்றனர். இந்த நிலையில், அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கிடையாது என்பது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனினும், மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது, அவர்கள் வேறு பள்ளிகள் மூலமாக பொதுத்தேர்வை எழுதுவதற்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அரசுத் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எத்தனை பள்ளிகளை அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருகின்றன என்பது குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாக தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்து இருக்கிறது.
இதையும் படிங்க:சுருக்குமடி வலை பயன்படுத்த அனுமதி; உச்சநீதிமன்ற விதித்த நிபந்தனை என்ன?