சென்னை: சர்வதேச அல்லது தேசிய அளவிலான மாநாடுகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களில் சிறப்பு அனுமதி பெற்று மது விநியோகிக்கவும், அருந்தவும் அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மார்ச் 18ஆம் தேதியிட்ட அரசிதழ் இன்று(ஏப்.24) காலை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், திருமண மண்டபங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் உரிய அனுமதி பெற்று மது அருந்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த சிறப்பு அனுமதியை பெற்று தங்களது விருந்தினர்களுக்கு மதுபானங்களை வழங்கலாம் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் இந்த சிறப்பு அனுமதியை வழங்கலாம் என புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தி மதுபானம் பயன்படுத்துவதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக்கை தவிர பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் வழங்கப்பட்டு வந்த மதுபானங்கள், இனி திருமண அரங்குகள், விளையாட்டு கூடங்களிலும் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
இந்த சிறப்பு அனுமதியைப் பெற மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளுக்கு தனித்தனியாக கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுவை அனுமதிக்க ஆண்டுக்கு பதிவுக் கட்டணமாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு நாளுக்கு 11 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நகராட்சி பகுதிகளில் ஆண்டுக்கு பதிவுக் கட்டணமாக 75 ஆயிரம் ரூபாயும், ஊரக பகுதிகளில் பதிவுக் கட்டணமாக ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் மதுபானங்களை பரிமாற சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் நாளில் இருந்து ஒரு வாரத்திற்கு முன்பு ஆன்லைனில் விண்ணப்பித்து இந்த சிறப்பு அனுமதியை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இத்துறையின் அமைச்சர் செந்தில்பாலாஜி, திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை என்றும், சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளில் மது அருந்த அனுமதிக்கப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘பிடிஆர் மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்’ - விபி துரைசாமி!