சென்னை: வியாசர்பாடி எம்.எம் கார்டன் பகுதியைச் சேர்ந்வர் கூலி தொழிலாளி ரவி. இவரது மனைவி உஷா. இவர்களுக்கு மகள் பிரியா (17), ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததுடன், கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற பிரியாவுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டதால் கடந்த அக். 28ஆம் தேதி அவர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் பிரியாவிற்கு மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம்சங்கர் ஆகியோர் மூலம் மூட்டு ஜவ்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அந்த அறுவை சிகிச்சைக்கு பின் மாணவி பிரியாவின் உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த நவ. 8ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரியா அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சையின்போது மாணவி பிரியாவிற்கு காலில் ரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டதால் அவரது முழங்கால் பகுதி வரை அகற்றப்பட்டது.
தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மாணவி பிரியாவின் உடல்நிலை கடந்த நவ.14 ஆம் தேதி திடீரென கவலைக்கிடமான நிலையில், மாணவி பிரியா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக நவ.15 ஆம் தேதி காலை கால்பந்தாட்ட வீராங்கனையான மாணவி பிரியா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மாணவி பிரியாவின் இறப்புக்கு மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சைதான் காரணம் என கூறி, பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்த பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை மருத்துவர்களான சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல காவல் துறை சார்பிலும் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
குறிப்பாக மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் ஆகியோரின் இருப்பிடம், குடும்ப விவரங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்த காவல் துறையினர், அவர்களின் செல்போன் சிக்னல்களை வைத்து அவர்கள் எங்கு உள்ளனர் என்பதை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் இச்சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் சிங்கார வடிவேலன் மற்றும் ஸ்ரீதர் ஆகிய இருவர் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அதோடு மாணவி பிரியா மரண வழக்கு தொடர்பாக தேவையான விளக்கங்களுடன் மருத்துவ அறிக்கையை காவல் துறைக்கு அனுப்பும்படி 12 கேள்விகளுடன் காவல் துறை சார்பில் மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், தனிக்குழு நடத்தி முடித்த விசாரணை தொடர்பான மருத்துவ அறிக்கை, மருத்துவ கல்வி இயக்குநரகம் மூலம் காவல் துறையிடம் வழங்கப்பட்டது.
மருத்துவ அறிக்கையில் மாணவி பிரியாவின் மரணம் மருத்துவர்களின் அஜாக்கிரதையாலும், தவறான சிகிச்சையின் காரணமாகவும் நிகழ்ந்துள்ளது எனவும், இச்சம்பவத்தில் அறுவை சிகிச்சை செய்தவர், மயக்க மருந்து நிபுணர், பணி மருத்துவ அதிகாரி, எலும்பியல் நிபுணர் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் பணியில் இருந்த வார்டு ஊழியர் ஆகியோர் செய்த தவறு எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் உள்பட இதில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படியும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தனிக்குழு விசாரணை தொடர்பான மருத்துவ அறிக்கை காவல் துறை மூலம் சட்ட வல்லுநர்களுக்கு அனுப்பப்பட்டு, எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று (நவ.18) இரு மருத்துவர்கள் மீது 304 (a) அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரியா மரணமடைந்த விவகாரத்தில் இரண்டு மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று மருத்துவர்கள் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து இன்று விசாரணைக்கு ஆஜராக காவல் துறையினர், சம்மன் அனுப்பவுள்ளனர். சம்மனை ஏற்கவில்லை என்றால் உடனடியாக கைது செய்ய காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி கொளத்தூர் காவல் துறை துணை ஆணையர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் தற்போது எங்கே உள்ளார்கள் என தேடி வருகின்றனர்.
ஏற்கனவே செல்போன் சிக்னலை வைத்து மருத்துவர்களை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் தற்போது எங்கு பதுங்கி இருக்கிறார்கள் என்பது குறித்து தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மருத்துவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவை மருத்துவத்துறை அதிகாரிகள் கொடுக்க சென்றனர்.
அப்போது, மருத்துவர்கள் வீட்டில் இல்லை என்பதால் வீட்டின் முன்பு அந்த உத்தரவானது ஒட்டப்பட்டு வந்தது. இதே போல தற்போது காவல் துறை தரப்பில் முதற்கட்டமாக அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவுள்ள நிலையில் சம்மனை வாங்குவதற்கு வீட்டில் ஆளில்லை என்றால் வீட்டின் முன்பு சம்மன் ஒட்டப்படும் எனவும் இதனையடுத்து இரண்டாவது சம்மனுக்கும் ஆஜராகவில்லை என்கிற பட்சத்தில் கைது செய்யவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், நேற்று உயர் நீதிமன்றத்தில் உடனடியாக காவல் நிலையத்தில் சரணடைய நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளதால், காவல் துறையினர் கைது நடவடிக்கையை தவிர்க்க மருத்துவர்கள் காவல் நிலையத்தில் ஆஜராகுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மும்பை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தாரா ஷ்ரத்தா? - வெளியான பகீர் தகவல்