எஸ் பி பாலசுப்ரமணியம் சிகிச்சை அளிப்பதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியதாகவும், ஐபிஎல் பார்க்க வேண்டும் என விரும்பி அவர் ஐபிஎல் மேட்ச் பார்த்ததாகவும் எம்ஜிஎம் மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை குழுவின் இணை இயக்குனர் மருத்துவர் சுரேஷ் ராவ் தெரிவித்தார்.
திரையிசைப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆரம்பநிலையில் நோய்த்தொற்று குறைவாக இருந்தபோது தனக்கு உடல் நிலையில் எந்தவித பாதிப்பும் இல்லை என அவரே வீடியோ மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.ஆனால் நுரையீரலில் பாதிப்பு அதிகரித்ததால், ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் அவருக்கு வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது . அதனால் நோய் தொற்றிலிருந்து அவர் மீண்டு வந்தார்.
மேலும், நுரையீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்வதற்காக அவருக்கு மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. கரோனோ வைரஸ் தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்ட அவருக்கு நுரையீரலின் செயல்பாடுகளும் அதிகரித்து வந்தன. ஆனால், எதிர்பாராதவிதமாக அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25ஆம் தேதி மதியம் ஒரு மணியளவில் உயிரிழந்தார்.
இதுகுறித்து இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையின் இணை இயக்குனர் மருத்துவர் சுரேஷ் ராவ் கூறியதாவது, பாடகர் எஸ்பிபி உலகளவில் சிறப்பு பெற்று மிக உயர்ந்த நிலையில் இருந்தவர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது முழுமையாக ஒத்துழைப்பு அளித்தார். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, உலக அளவில் ரசிகர்களை பெற்ற அவர், மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் அனைவரிடமும் மரியாதையுடன் பழகினார். அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது, டாக்டரே எனக்கு எந்த சிகிச்சை சரியாக இருக்கிறதோ அதை செய்யுங்கள் என கூறுவார். அவருக்கு எக்மோ போன்ற சிகிச்சை அளிக்கும் போதும் முழுமையாக ஒத்துழைப்பு அளித்தார்.
மேலும், அவருக்கு நுரையீரல் மற்றும் உடல் வலிமை பெறுவதற்காக பிசியோதெரபி அளித்த பொழுதும் அதனை ஏற்றுக்கொண்டு செய்தார். அவரால் அப்போது முடியாவிட்டால், சற்று ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் மருத்துவரை அழைத்து பிசியோதெரபி மேற்கொண்டார். மருத்துவமனையில் இருந்த பொழுது அனைவருக்கும் ஒத்துழைப்பு அளித்து சிகிச்சை பெற்றார். ஒருமுறை அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபொழுது, எனக்கு போரடிக்கிறது ஐபிஎல் பார்க்க வேண்டும் என கூறினார். உடனடியாக டிவி தனியாக ஏற்பாடு செய்தோம். அவர் எழுந்து அமர்ந்து ஐபிஎல் மேட்ச் பார்த்தார். மேலும், பாடல்கள் கேட்க வேண்டுமென கேட்டார். அதனையும் ஏற்பாடு செய்து கொடுத்த பொழுது பாடலை ரசித்துக் கேட்டார்.
அவர் முழுமையாக குணமடைய வேண்டும் என்பதற்காக பல துறையைச் சார்ந்த மருத்துவர்களும் இணைந்து சிகிச்சை அளித்தோம். தினமும் அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு துறையைச் சேர்ந்த மருத்துவர்களும் ஆலோசனை செய்து சிகிச்சையைத் தொடர்ந்து அளித்து வந்தோம். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா சிகிச்சை அளித்த மருத்துவருடன் ஆலோசனை செய்து சிகிச்சை அளித்து வந்தோம். அவரது உடலின் ஒவ்வொரு நிலையையும் விளக்கமாக எடுத்துக் கூறினோம். அவர் உடலில் ஆக்சிஜன் அளவு, வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சை போன்றவை குறித்து எடுத்துக் கூறும் பொழுதும் டாக்டர் உங்களுக்கு எது சரி என்று தெரிகிறதோ அதை செய்யுங்கள் என ஒத்துழைப்பு அளித்தார்.
வென்டிலேட்டர் சிகிச்சையினை அவருக்கு அளித்த பொழுது வலி இருக்கிறதா என கேட்டதற்கு, இல்லை என தெரிவித்தார். அவரிடம் பிசியோதெரபி செய்யவேண்டுமென கூறினோம். உடனடியாக அவர் ஒப்புக்கொண்டு பிசியோதெரபி செய்தார். கை ,கால்களுக்கு தனித்தனியாக பிசியோதெரபி மேற்கொண்ட அவர், இயந்திரத்தின் மூலமும் பிசியோதெரபி செய்தார். மருத்துவமனையில் இருந்தபோது ஒருமுறை கூட கோபப்பட்டது கிடையாது. எப்போதும் ஒத்துழைப்பு அளித்தார்.
ஹவ் ஆர் யூ என கேட்டால் கையை உயர்த்தி நலமாக இருப்பதாக தெரிவித்தார். எங்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த பொழுது மறக்க முடியாத நிகழ்வாக, ஒரு முறை வென்டிலேட்டர் எடுத்துவிட்டு எவ்வாறு இருக்கிறீர்கள் என கேட்ட பொழுது ஃபைன் என அவரின் கம்பீரமான குரலில் தெரிவித்தார். அப்போது அவர் குரலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை உணர்ந்தோம். குணமடைந்த பிறகு எங்களுக்காக ஒரு பாடல் பாட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தோம். அதை நிறைவேற்றுவதாக கூறினார். அவர் நோய் தொற்றை எதிர்த்து மிகப் பெரிய அளவில் போராடினார். அவர் ஒரு போராளியாகவே இருந்தார்.
அவர் திடீரென உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு தீவிர நிலைக்கு சென்றார். உடனடியாக மருத்துவமனையில் அனைத்து மருத்துவர்களும் கூடி அடுத்து என்ன சிகிச்சை அளிக்க முடியும் என ஆலோசனை செய்தோம். எனினும் அவரை காப்பாற்ற இயலவில்லை. அவரின் மறைவு எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும் என உருக்கமுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அன்பில் வந்த ராகமே... அன்னை தந்த கீதமே!