சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழையானது பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (டிச.17) முதல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ததன் காரணமாக, அங்குள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி, குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதனால் மக்கள் பெரும் அவதியுற்று, பாதுகாப்பான முறையில் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் “கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கும், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சிறப்பு அலுவலர்களை நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒருங்கிணைப்பு அலுவலராக செந்தில் ராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரை தொடர்பு கொள்ள 7397770020 என்ற எண்ணை அழைக்கலாம்.
பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்படும். தூத்துக்குடியில் உள்ள கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர்களாக,
1. இரா.ஐஸ்வர்யா, கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தூத்துக்குடி, தொலைபேசி எண்: 8973743830
2. ஓ.ராஜாராம், துணை ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி, தொலைபேசி எண்: 9943744803
3. எஸ்.அமுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), தூத்துக்குடி, தொலைபேசி எண்: 9445008155
இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் இப்பணிகளை ஒருங்கிணைக்க, திருநெல்வேலி மாவட்ட நகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தொடர்பு கொள்ள 9442218000 என்ற எண்ணை அழைக்கலாம். அங்கு கூடுதலாக பின்வரும் அலுவலர்கள் இப்பணியினை ஒருங்கிணைப்பார்கள்.
1. சீ.கிஷன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி), திருநெல்வேலி, தொலைபேசி எண்: 9123575120
2. ரேவதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், திருநெல்வேலி, தொலைபேசி எண்: 9940440659
இப்பணிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா செயல்படுவார். நிவாரணப் பொருள்கள் வழங்க விரும்புவோர் மற்றும் தன்னார்வலர்கள் மேற்காணும் அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தென் மாவட்டங்களில் கனமழை பாதிப்பு; சென்னை மாநகராட்சி சார்பில் விரையும் அதிகாரிகள்!