சென்னை: இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2021-2022 கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களில் பலர் உயர்கல்விக்கு சென்றுவிட்டனர்.
எனினும் சூழ்நிலை காரணமாக சில மாணவர்கள் இன்னமும் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்காகவே தமிழ்நாட்டில் உயர்கல்விக்கான சிறப்பு முகாம்கள் இதுவரை இரண்டு முறை நடத்தப்பட்டுள்ளன. மூன்றாவது முறையாக 28ஆம் தேதி காலை 10 மணி தொடங்கி முகாம்கள் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் கல்லூரிச் சேர்க்கைக்காக முறையாக வழிகாட்டுதலோடு ஆலோசனை வழங்கப்படவுள்ளது. கண்முன் உள்ள பல்வேறு வாய்ப்புகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்வதுடன் உயர்கல்வியின் அவசியமும் எடுத்துரைக்கப்படும்.
இதுவரை கல்லூரியில் சேராத தங்கள் வகுப்பு நண்பர்களை அழைத்துக்கொண்டு வரும்படியோ, அவர்கள் குறித்த தகவல்களை பள்ளி தலைமையாசிரியருக்கு அளிக்கும்படியும் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
அரசு வழிகாட்டுதல் வேண்டி வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற முதன்மைப் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் மூலம் அவரவர் பயின்ற பள்ளிகளில் ஆலோசனை வழங்கப்படும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்...