சென்னை: தொடர் விடுமுறையை (ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (அக்.22) நள்ளிரவு 12.00 மணி நிலவரப்படி சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன் கூடுதலாக 239 பேருந்துகளும், கடந்த 3 நாட்களில் மொத்தம் 8 ஆயிரத்து 3 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 180 பயணிகள் பயணித்துள்ளனர் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதைத் தொடர்ந்து, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என்று தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால், வெளி ஊர் மற்றும் வெளி மாநிலங்களில் வேலை பார்க்கும் மக்கள் அவரவர் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்றனர். இதில் மாநிலம் முழுவதும் பெரு நகரங்களில் இருந்து கிராமங்கள் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு, உதவும் வகையில் போக்குவரத்து சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள், கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் பிரிக்கப்பட்ட நிறுத்தங்கள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதுமட்டுமின்றி, பயணிகளின் வசதிக்காக சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையிலிருந்து, கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தங்கள் மூலம் தினமும் இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன், கூடுதலாக 2 ஆயிரத்து 265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
3 நாட்களில் இது வரை மொத்தம் 8 ஆயிரத்து 3 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 180 பயணிகள் பயணித்துள்ளனர் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் ஊருக்கு சென்றவர்கள் அனைவரும் நாளை இரவு (அக்.24) இல்லை நாளை மறுநாள் இரவு (அக்.25) சென்னைக்கும், மற்றும் பல முக்கிய நகரங்களுக்கு பொதுமக்கள் திரும்ப உள்ளதால், இதற்காக சிறப்பு பேருந்துகள் புதன்கிழமை(அக்.25) வரையில் பிற பகுதிகளிலிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை: தருமபுர ஆதீனத்தில் படையலிட்டு சிறப்பு வழிபாடு!