பொதுத்தேர்வுக்கான நாள்கள் நெருங்கியதை அடுத்து சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அரசுப் பேருந்துகளை மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு இயக்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இதுதொடர்பாக சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோர் எட்டாம் தேதி முதல் தேர்வுப்பணிகளுக்காக பள்ளிகளுக்கு வருகின்றனர். எனவே அன்று முதல் சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளிலிருந்து 41 வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் காலையும் மாலையும் இயக்கப்படும். அதேபோல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வையொட்டி வரும் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மாணவர்களுக்காக 41 வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும்.
தேர்வின்போது 7.30 மணி மற்றும் 8 மணி ஆகிய இரு நேரங்களில் தேர்வு மையங்களை நோக்கி அரசுப் பேருந்துகள் புறப்படும். தேர்வு முடிந்த பிறகு பிற்பகல் 1.45 மற்றும் 2.15 ஆகிய நேரங்களில் பேருந்துகள் மீண்டும் தேர்வு மையங்களில் இருந்து, மாணவர்களின் வீடுகளை நோக்கி இயக்கப்படும்" எனத்
தெரிவித்துள்ளார்.