மதுரவாயல் தெற்குப் பகுதி திமுக செயலாளர் காரப்பாக்கம் கணபதியின் இல்லத் திருமணவிழா வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலமையேற்று நடத்தினார். இதில், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய ஸ்டாலின், "1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு சீர்திருத்த திருமணம் செல்லுபடியாகும் என அண்ணா சட்டமாகக் கொண்டுவந்தார். காவிரி டெல்டாப் பகுதியை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது யாரை ஏமாற்றுவதற்காக?. டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற விவசாயிகள், திமுகவினர் போராடி வருகின்றனர்.
சிறப்பு வேளாண் மண்டலமாக மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து இதற்கு அனுமதி பெற வேண்டும். இது தெரியாமல் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மக்களவையில் டி.ஆர். பாலு கேட்டுள்ளார். ஆனால், மத்திய அரசு உரிய பதிலளிக்கவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுகுறித்த கேள்வியை திமுக எழுப்பும். அரசு அதற்கு உரிய பதிலளிக்கவேண்டும்.
உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவிய நிலையில், எதிர்வரும் தேர்தலுக்கு விவசாயிகளை ஏமாற்றும் விதமாக இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு நாடகமாடுகிறார். இதுகுறித்து மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவதற்கான அருகதை அதிமுக அரசுக்கு இல்லை. அதிமுக அரசு மத்திய அரசிடம் அடிமைப்பட்டு கிடக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: ‘ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் சக்தி உள்ள மாநிலம் தமிழ்நாடுதான்’ - எடப்பாடி பழனிசாமி