சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (பிப்.23) இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.
இதையடுத்து, பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்.25, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேரவைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
- தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்.24ஆம் தேதி நடைபெறாது.
- பிப்.25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறும்.
- பிப்.25ஆம் தேதி 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் மீது பொது விவாதம் தொடங்கும்.
- பிப். 26ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் மீது இரண்டாம் நாள் பொது விவாதம் நடைபெறும். பிப்.27ஆம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும்.
- 2021-2022ஆம் ஆண்டின் செலவினங்களுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு நடைபெறும். செலவினங்களுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் குறித்து நிதி ஒதுக்க சட்ட முன்முடிவு அறிமுகம் செய்யப்படும்.
- பிப்.27ஆம் தேதி அரசினர் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும்.
- பிப்.25ஆம் தேதி சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கும், விருதுநகர் மாவட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை மண்டபத்தில் மூவரின் உருவப்படங்களை திறந்து வைக்கும் முதலமைச்சர்!