கரோனா பரவல் காரணமாக தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்கும் நோக்கில் இந்த முறை சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவெடுக்க பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று (செப்டம்பர் 8) கூடியது.
அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித்தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பேரவைத் தலைவர் தனபால் பேசுகையில், தனது தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகின்ற 14ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று சட்டப்பேரவையில், முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து தீர்மானக் குறிப்பு வாசிக்கப்படும் என்றும் அதன் அடிப்படையில்,
இரங்கல் தீர்மானங்கள்,
1, இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவு குறித்தும்,
2 சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் மறைவு குறித்தும்
3, நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தகுமார் மறைவிற்கும்
4, கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, சட்டப்பேரவைக் கூட்டம் அத்துடன் நிறைவுபெறும் என்று தெரிவித்தார்.
செப்.15ஆம் தேதி அன்று அரசினர் அலுவல்கள் குறித்து எடுத்துக்கொள்ளப்படும் என்றும், செப்.16ஆம் தேதி துணை நிலை அறிக்கை தாக்கல், சட்டமுன்வடிகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றுதல் ஏனைய பணிகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சபாநாயகர் தனபால், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை கட்டாயம் எனத் தெரிவித்தார். பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பவர்களுக்கு கரோனா பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் 72 மணி நேரத்திற்கு முன்னதாக கரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் எனவும் சபாநாயகர் தனபால் தெரிவித்தார். மேலும் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என்று தெரிவித்தார்.