சென்னை சூளைமேட்டிலுள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் எஸ்பிபி சரண் மற்றும் மருத்துவக் குழுவினர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய சரண், "தந்தையின் மரணம் தொடர்பாக ஏதேதோ சர்ச்சையை கிளப்புகிறார்கள். மருத்துவமனை கட்டணத்தை எங்களால் செலுத்த முடியவில்லை எனவும், தமிழ்நாடு அரசிடம் உதவி கேட்டதாகவும், துணை குடியரசுத் தலைவரின் மகன் கட்டணத்தைச் செலுத்தினார் என்றெல்லாம் கூறுகிறார்கள். இது எதுவுமே உண்மை இல்லை. மருத்துவமனைக் கட்டணம் குறித்து எவ்வித வதந்தியையும் கிளப்பாதீர்கள்.
சிகிச்சைக்கான தொகையை அவ்வப்போது சிறிது சிறிதாக செலுத்திக்கொண்டே இருந்தோம். அதுபோக காப்பீடு மூலமாகவும் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தப்பட்டது. அப்பா மரணமடைந்த பிறகு செலுத்த வேண்டிய பாக்கித் தொகையை செலுத்தவேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அப்பாவின் உடலை நுங்கம்பாக்கம் வீட்டிற்கு எடுத்துவந்தோம். மாநகராட்சி, காவல்துறை, அரசு என அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கினர். ஆனால், மக்கள் கட்டுக்கடங்காமல் வந்ததாலும், அஞ்சலி செலுத்த வந்த மக்கள் பக்கத்து வீட்டுச் சுவர் ஏறி குதித்தது போன்ற நிகழ்வு நடந்ததாலும், இரவோடு இரவாக உடலை தாமரைப்பாக்கம் கொண்டு செல்ல நேர்ந்தது.
மருத்துவக் கட்டணம் அதிகமாக இருந்தது. அதற்காக அரசை நாடினோம். அரசு தரப்பில் பதில்வர தாமதமானதாக வெளிவந்த தகவல்கள் எதிலும் உண்மையில்லை. கரோனாவால் எஸ்பிபி உயிரிழக்கவில்லை. நுரையீரலில் அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாகவே அவர் உயிரிழந்தார். அப்பாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக் கட்டணம் குறித்த விவரத்தை வெளிப்படையாக கூறமுடியாது.
டிரக்யாஸ்டமி சிகிச்சை செய்யப்பட்டது குறித்து ஏன் முதலில் சொல்லவில்லையென்றால், இனி அவரால் பாட முடியாதா? என்று அவரது ரசிகர்களுக்கு அச்சம் வரும். அதனால், அப்போது, அதுகுறித்து சொல்லவில்லை. மருத்துவமனை நிர்வாகத்திடமும் அதுகுறித்து சொல்லவேண்டாம் என கேட்டுக்கொண்டேன். அப்பாவுக்கு தொடர்ந்து எக்மோ, வென்டிலேட்டர் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால், அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. அதனால்தான் தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.
அப்பாவுக்கு நினைவு இல்லம் அமைக்கத் திட்டமிட்டுள்ளேன். என்னால் முடிந்தவரை அதைச் செய்வேன். மேலும் வெளியூர், வெளிநாடுகளில் இருந்து அப்பாவின் நினைவிடத்திற்கு பலர் வந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் மரியாதை செலுத்துவதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கு உள்ளாட்சி, காவல்துறையிடம் பேசிவருகிறேன். அனுமதி கிடைத்தவுடன் முறைப்படி அதனை அறிவிப்பேன்" என்றார்.
இதையும் படிங்க: குணமடைந்ததும் எங்களுக்காக ஒரு பாடல் பாட வேண்டும் - எஸ்பிபியின் மருத்துவமனை நாட்கள் பற்றி விவரிக்கும் சிறப்பு மருத்துவர்