தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தண்ணீர் பஞ்சம் உச்சத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தாலும், தலைநகரின் தண்ணீர் பஞ்சமே அதிகளவில் பேசப்பட்டது. இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட சில இடங்களில் அவ்வப்ப்போது மழை பெய்ததால் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து மக்கள் ஓரளவு தப்பினர்.
இந்நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் அனைவரும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணியை தொடங்குங்கள் என்றும், ஒரு குழுவோ, அமைப்போ, அரசோ மட்டும் இதை முன்னின்று முடிப்பது சுலபமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், சமீபத்தில் பெய்த மழையில் எத்தனை விழுக்காடு நீரை நாம் சேமித்து வைத்திருக்கிறோம் என கேள்வி எழுப்பியுள்ள அவர், இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க உறுதி கொள்வோம் என்று மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.