'டார்லிங்', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து சான் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கூர்கா'. இந்தப் படத்தில் யோகி பாபு, சார்லி, மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் நடித்துள்ளது.
‘4 மங்கீஸ்’ ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கரு. பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து பேசினார்.
அது பற்றி அவர் கூறியதாவது, "தங்கம், பிளாட்டினம் இவைகளை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது. இப்போது நான் குளிப்பதற்கு அரை வாளி தண்ணீருக்காக அரை மணி நேரமாக எனது வீட்டில் காத்துக்கொண்டிருக்கும் நிலை உள்ளது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை நிலவிவருகிறது. அதற்குக் காரணம் நாம்தான். இனியாவது நாம் தண்ணீர் சிக்கனத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இதற்கு சின்ன சின்ன டிப்ஸ் உள்ளது. அதை அன்றாடம் நாம் பயன்படுத்தினால் போதும் தண்ணீரை சேமிக்கலாம். நம் தட்டில் சாப்பிடுவதை விட வாழை இலையில் சாப்பிடலாம் அதனால் தண்ணீர் மிச்சமாக வாய்ப்புள்ளது. தினந்தோறும் வெவ்வேறு ஆடைகளை பயன்படுத்தாமல் வாரத்திற்கு இரண்டு ஆடைகளை மட்டுமே மாற்றி மாற்றி பயன்படுத்தினால் சலவைக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் மிச்சமாகும்.
நாம் அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேமித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அடுத்த தலைமுறையினருக்கு பணம், சொத்து கொடுக்கலாம்... ஆனால் அதை விட முக்கியம் தண்ணீர்” என்று தெரிவித்தார்.