சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய்யம் இன்று (செப்.18) அறிவித்துள்ளது.
சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழைபதிவு: பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) ஆகிய பகுதிகளில் தலா 13 செ.மீ மழையும், கள்ளக்குறிச்சி, ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி) பகுதிகளில் தலா 12 செ.மீ மழையும், புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி) பகுதியில் 11 செ.மீ மழையும், தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை) பகுதியில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
அரூர் (தர்மபுரி), துவாக்குடி IMTI (திருச்சிராப்பள்ளி), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) பகுதிகளில் தலா 8 செ.மீ மழையும், சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), TCS மில் கேதண்டபட்டி (திருப்பத்தூர்) பகுதிகளில் தலா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், தஞ்சை, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 6.செ.மீ முதல் 1.செ.மீ வரை மழையானது பதிவாகி உள்ளது.
தமிழக கடலோரப்பகுதி மீனவர்களுக்கு எச்சரிக்கைகள் ஏதுமில்லை. வங்கக்கடல் பகுதிகள்: அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: விஸ்வகர்மா கல்வித் திட்டத்தை கடுமையாக விமர்சித்த சீமான்..!