தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நாளை மறு நாள் முதல் தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.
வெப்பநிலையைப் பொறுத்தவரை வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடக்கூடிய அளவில் மழை பதிவாகவில்லை. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.