ஊரடங்கு உத்தரவால் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக ரயில் நிலையத்தில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் வருமானம் இன்றி தவிக்கின்றனர்.
இந்நிலையில், தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டம் சார்பில், பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்தப் பணியைச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், எழும்பூர் ரயில் நிலையத்திலும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. இதுவரை மொத்தமாக 15,600 பேருக்கு இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பிற்பகல் நேரத்தில், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம் அடங்கிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதே போல, சுமார் 80 சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும், 200 தூய்மைப் பணியாளர்களுக்கும் தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து இலவசமாக ரூ.1,031 மதிப்பிலான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில், அரிசி, பருப்பு, மைதா, ரவை, சர்க்கரை, சமையல் எண்ணெய், கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.