கரோனா பாதிப்புக்குப் பின் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை சாலை மார்க்கமாக எடுத்துச் செல்வதுக்கு பதிலாக, ரயில்களில் எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும், இதுவரை இல்லாத அளவிற்கு வாகனங்களை எடுத்துச் சென்றதன் மூலம் அதிக அளவிலான வருவாயை தென்னக ரயில்வே ஈட்டியுள்ளது.
வாலாஜாபாத் மற்றும் மேல்பாக்கம் வாகன ஏற்றும் நிலையங்களில் இருந்து 59 பெட்டிகளில் புதிதாக தயாரிக்கப்பட்ட வாகனங்கள் ரயில்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதன்மூலம் 14.49 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 39 சதவிகிதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டு வெறும் 8,350 கார்கள் மட்டுமே ரயிலில் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தற்போது 12 ஆயிரத்து 158 கார்கள் கொண்டு செல்லப்பட்டன. இதன்மூலம் 46 சதவிகித கூடுதல் கார்கள் ரயில்களில் ஏற்றப்பட்டுள்ளன.
கார்களை ஏற்றிச் செல்ல ஏதுவான பிசிஏசிபிஎம் (Bogie Covered Auto rake Double Decker Wagon) ரக பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இதன்மூலம், ரயில்களில் கார்கள் ஏற்றிச் செல்வது அதிகரித்திருப்தாக தென்னக ரயில்வே அலுவலர்கள் கூறுகின்றனர். பழைய பெட்டிகளில் வெறும் 120 கார்கள் மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும் என்ற நிலையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பெட்டிகளில் 270 முதல் 282 பெட்டிகள் வரை கொண்டு செல்ல முடியும்.
அதேபோல் ரயில்களில் சரக்குகளை ஏற்றிச் செல்ல ரயில்வே துறை சார்பாக பல்வேறு சலுகைகளை வழங்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. சரக்கு போக்குவரத்தை அதிகரிப்பது தொடர்பாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ரயில்வே வணிகப் பரிவு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின் ரயிலில் சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், தென்னக ரயில்வே பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டது. சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டது. அதேபோல், தொழில்துறையினருக்கு சிறப்பு உதவி எண் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் ரயில்கள் மூலமாக சரக்குகள் கொண்டு செல்லப்படுவது கணிசமாக அதிகரித்துள்ளதாக அலுவலர்கள் கூறுகின்றனர்.
நிவர் புயல் பாதிப்பு மற்றும் தொடர் மழை ஆகியவை காரணமாகவும் ரயில்களில் கார்கள் ஏற்றிச் செல்லப்படுவது அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகார் அளியுங்கள்: தமிழ்நாடு மின்சார வாரியம்