வர்த்தக சங்கங்களின் வேண்டுகோளின்படி, ரயில்வே பார்சல் சேவையிலும் முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது தென்னக ரயில்வே. இதன்படி பயணிகள் ரயில்களில் இயக்கப்படும் பார்சல் வேன்களில் வர்த்தகர்கள் தாங்கள் வைத்திருக்கும் பொருட்களின் எடைக்கு ஏற்ப இடத்தை 120 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளலாம், இதன் மூலம் வர்த்தகர்கள் தங்களது சரக்குகளை அனுப்புவதை திட்டமிட்டு கொள்வதோடு, ரயிலில் அனுப்புவதையும் உறுதி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு மெட்ரிக் டன், 23/24 டன் பார்சல் வேன்களில் 120 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும், குறிப்பிட்ட பயணிகள் ரயில் அல்லது கால அட்டவணையில் இயக்கப்படும் பார்சல் ரயில்கள் ஆகியவற்றில் சரக்குகளை அனுப்பலாம்.
ஏற்கனவே ஒப்பந்த குத்தகை அடிப்படையில் உள்ள பார்சல் வேன்களுக்கு முன்பதிவு செய்ய முடியாது என்றும், முன்பதிவு செய்ய விரும்புவோருக்கு ஒப்பந்த குத்தகை முறைக்கு உள்ள பெயர் பதிவு அவசியமில்லை என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
முன்பதிவு செய்ய விரும்புவோர் பத்து விழுக்காடு பார்சல் கட்டணத்தை முன்பே செலுத்த வேண்டும் எனவும், மீதமுள்ள 90 விழுக்காடு கட்டணத்தை ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக செலுத்தலாம்.
முன்பதிவை ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக ரத்து செய்தால் 50 விழுக்காடு கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் தவறினால் முழு கட்டணமும் காலாவதியாகிவிடும் எனவும் ரயில்வே துறை உறுதியளித்துள்ளது. பார்சல் சேவை பற்றிய மேலும் தகவல் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 139 - யையும் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொதுமுடக்க தளர்வு எதிரொலி: ரயில், பேருந்து சேவைகள் தொடக்கம்!