சென்னை: மிக்ஜாம் புயல் ஆந்திரப் பகுதியில் கரை கடந்ததால் சென்னை இயல்பு நிலைமைக்கு திரும்பி வருகிறது. இதனால் புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து மீண்டும் இன்று துவங்கி இருக்கிறது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே இன்று (டிச.5) வெளியிட்ட தகவலின்படி, 'செவ்வாய்க்கிழமை (டிச.5) காலை சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) விழுப்புரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. சென்னை - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637) செவ்வாய் இரவு விழுப்புரத்தில் இருந்து இயக்கப்பட இருக்கிறது.
இருந்த போதிலும் திங்களன்று சில ரயில்கள் சென்று சேரும் ரயில் நிலையங்களுக்கு வந்து சேராததால், மதுரை - சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12636/12635), காரைக்குடி - சென்னை - காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (12606/12605), தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691), திருவாரூர் வழி தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (20693), செங்கோட்டை வழி சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101), தஞ்சாவூர் வழி சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16751), போடிநாயக்கனூர் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (20602) ஆகியவை செவ்வாய்க்கிழமை அன்றும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மற்ற ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் நிலவும் புயல், வெள்ளம் காரணமாக டிசம்பர் 4 அன்று புறப்பட்ட டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641) மற்றும் டிசம்பர் 3 அன்று புறப்பட்ட பிகானீர் - மதுரை எக்ஸ்பிரஸ் (22632) ஆகியவை குண்டூர், நந்தியால், யெர்ரகுண்டலா, ரேணிகுண்டா, காட்பாடி, விழுப்புரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது' என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத் துறை அதிகாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி!