சென்னை : கேரளாவில் உள்ள அமிர்தா மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 13 தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏன் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிக்கை பெறவில்லை என்பது குறித்து கேரள சுற்றுச்சூழல் துறை மற்றும் மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் பதிலளிக்குமாறு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேரளாவில் உள்ள 15 தனியார் மருத்துவ கல்லூரிகள் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிக்கை பெற்றுள்ளனவா? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கீழ் கேட்டறிந்தார்.
ஆனால் அவருக்கு வந்த பதிலில் மொத்தம் 2 கல்லூரிகள் மட்டுமே பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னையில் உள்ள தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை பெறாத கல்லூரிகளான அமிர்தா உள்ளிட்ட 13 கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு இன்று (ஆக.25) தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏன் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை பெறப்படவில்லை? அதற்கான காரணம் என்ன? எப்போது கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது? என்பது குறித்து மாநில சுற்றுச்சூழல் துறை மற்றும் மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : அடர் பிங்க நிறத்தில் ஏரி - ரசாயன கழிவு காரணமா?