தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கையின் மீதான கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு, சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றுவருகிறது. இன்று மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் துறை ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
நேரமில்லா நேரத்தின் போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அத்துறைகளின் அமைச்சர்கள் ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
![south lives North falls Anna would claim that](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6438955_che.jpg)
இதனிடையே, திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், “தூத்துக்குடி மாவட்டம் வழியாக நெடுஞ்சாலை செல்கிறது. ஆனால் இங்கு எவ்வித தொழிற்சாலையும், தொழில் வளமும் இல்லை. அறிஞர் அண்ணா சொன்னது போல், வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது என்ற நிலை தான் நிலவுகிறது. இதற்கு அமைச்சரின் பதில் என்ன ? ” என கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “தமிழ்நாடு முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு, அடிப்படை உள்கட்டமைப்பு, வளர்ச்சி ஆகியவற்றை இரு கண்களாக கொண்டு செயல்படுகிறார். தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. உலகளாவிய தொழில் முனைவோர்கள் தமிழ்நாட்டின் சூழலைக் கண்டு தொழில் மேற்கொள்ள வருகின்றனர். தொழிலில் சிறந்த மாநிலமாகவும், சட்டம் ஒழுங்கு சரியான மாநிலமாகவும் உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு வேகமாக முன்னேறியுள்ளது. ஆகவே பேரறிஞர் அண்ணா தற்போது உயிருடன் இருந்தால் தெற்கு வாழ்கிறது - வடக்கு வீழ்கிறது என்று தான் கூறி இருப்பார்” என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க : கொரோனா அச்சம்: சென்னையில் தொடர்ச்சியாக விமான சேவை ரத்து