சென்னை: ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் நாள் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பாக நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சி, மெட்ரோ பணிகள் காரணமாக 2023ஆம் ஆண்டு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டின் குடியரசு தின நிகழ்ச்சியை எங்கு நடத்தினால் பாதுகாப்பாக இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள், முப்படை அலுவலர்கள் மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் இன்று (டிச.1) ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்து தெற்கு கூடுதல் ஆணையர் ராஜேந்திரன், போக்குவரத்து கிழக்கு துணை ஆணையர் சமய சிங் மீனா, எஸ்சிபி பிரிவு துணை ஆணையர் சங்கரன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காலை 11:30 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் 20 நிமிடத்திற்கும் மேலாக நீடித்தது.
இந்த நிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் காமராஜர் சாலையிலேயே வேறு இடத்தில் குடியரசு தின நிகழ்ச்சிகளை நடத்த தமிழ்நாடு அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ள நிலையில், காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லம் அல்லது உழைப்பாளர் சிலை என இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் எந்த இடத்தில் நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக இட வசதி மற்றும் பாதுகாப்பு காரணம் கருதி, விவேகானந்தர் இல்லம் அருகிலேயே குடியரசு தின நிகழ்ச்சிகளை நடத்த தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இன்னும் சில நாட்களில் இறுதிக்கட்ட கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதில் எடுக்கப்படும் முடிவு இறுதி முடிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Online Rummy: சந்தேகம் தீர்ந்ததும் ஒப்புதல்..! ஆளுநரை சந்தித்த பிறகு அமைச்சர் தகவல்!