சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்(TNUSRB) சார்பில் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 3552 ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 295 மையங்களில் இன்று (நவ.27) நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.40 மணி வரை தேர்வு நடைபெற்றது.
18.24% பேர் ஆப்சென்ட்: தமிழ் மொழி, பொது அறிவு, உளவியல் ஆகிய பகுதிகளில் இருந்து 150 வினாக்களுக்கு தேர்வு நடைபெற்றது. 2,99,887 ஆண்களும், 66,811 பெண்களும், 59 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 3,66,727 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில், மொத்தம் 2,99,820 பேர் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வு எழுதினர். மீதமுள்ள 66,908 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இதன் மூலம் சுமார் 81.76% தேர்வர்கள் தேர்வில் பங்கேற்றனர் என்பது தெரியவந்துள்ளது. 18.24% தேர்வில் பங்கேற்க வருகை தரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆங்கில வழி கல்வி படித்தவர்களுக்கு தமிழில் மட்டுமே கேள்விகளும் தமிழில் அதிகமான மதிப்பெண்கள் கேட்கப்பட்டதால் கடினமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். அதிகம் படித்தவர்களும் இரண்டாம் நிலை காவலர்கள் தேர்விற்கு எழுத வந்ததால் குறைந்த அளவு தகுதி உள்ள தங்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் என தேர்வு எழுதியவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: tnusrb exam: 1 கி.மீ தூரம் காத்திருந்த பெண் தேர்வர்கள்!