சென்னை: தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு உளவியலாளர்கள் கலந்துகொண்டு மன ஆரோக்கியம் குறித்தும், உளவியலாளர் ஆலோசனை வழங்குவது குறித்தும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு டிஜிட்டல் மீள்திறன் குறித்து பேசிய முனைவர் ரூபேஷ் ( NIMHANS பேராசிரியர்), "7.83 பில்லியன் மக்களில் 4.20 பில்லியன் மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுகின்றனர். குறிப்பாக மாணவர்களை பொறுத்தவரையிலும், ஐந்தில் ஒரு பங்கு ஆசிரியர்கள் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாடம் கற்பித்து வருகின்றனர். அதிகபட்சமாக 18 - 29 வயது உடையவர்கள் 89% சமூகவலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இது போன்று தொடர்ந்து சமூக வலைதளத்தை பயன்படுத்துவதால் மனச்சோர்வு, யதார்த்த உலகிலிருந்து தப்பித்தல், பிரச்சனை அல்லது எதிர்மறை மனநிலை என பல்வேறு பிரச்சனைகள் உருவாகும். அதுமட்டுமின்றி தலைவலி, தூக்கமின்மை, உணவு பழக்கத்தில் மாற்றம், பார்வை பிரச்சனை, தனிப்பட்ட சுகாதாரம் இல்லாமை உள்ளிட்ட நோய்களும் உருவாக வாய்ப்புள்ளது.
சமூக ஊடகத்தை அதிக அளவில் பயன்படுத்தினால் தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கும். 2018 கணக்குப்படி சமூக வலைத்தளத்தின் மூலம் குற்றங்கள் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் அதிக அளவில் நடைபெறுகிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் 42%, பேஸ்புக் மூலம் 37%, ஸ்னாப்சாட் மூலம் 31% குற்றங்கள் நடைபெறுகிறது.
சமூக வலைத்தளத்தில் ஒரு நபரின் உருவத்தை வைத்து கேலி செய்வது, அவர்களை பற்றி தவறான தகவலை பரப்புவது போன்றவை குற்றங்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.இவை எல்லாம் தடுக்கவேண்டும் என்றால் ஒருவர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பிரச்சனைகளைக் கையாள வேண்டும், எப்போதும் நம்பிக்கை உடன் செயலாற்ற வேண்டும், மற்றவர்களுடன் நன்றாக பேச வேண்டும், மன அழுத்ததை சிறப்பாக கையாள வேண்டும், குறிப்பாக நன்றாக தூங்க வேண்டும்.
தொழில்நுட்பம் இல்லாத காலத்திற்கு நம்மால் செல்ல முடியாது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நன்மையும் தீமையும் செய்ய முடியும், அதைப் பயன்படுத்தி எந்த அளவிற்கு ஆக்கப்பூர்வமாகச் செயல்படுகிறோம் என்பதே முக்கியம்" என பேசினார்.
இதையும் படிங்க: TNTET Answer Key: ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 தற்காலிக விடைக் குறிப்பு வெளியீடு!