சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான யுத்தத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினரிடையே நடக்கும் போர் உச்சத்தை எட்டியுள்ளது. ஆரம்பம் முதலே ஓபிஎஸ் தரப்பை ஈபிஎஸ் தரப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். குறிப்பாக திமுகவின் ஆதரவாளராகவும், சொந்த கட்சிக்கு எதிராகவும் செயல்படுவதாக ஓபிஎஸ் மீது குற்றச்சாட்டு வைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக 51வது ஆண்டு விழாவில் ஓ.பன்னீர்செல்வத்தை, எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமரசனம் செய்திருந்தார்.
அதில் ஓபிஎஸ் உள்பட நீக்கப்பட்டவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்க ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பு இல்லை என பேசியிருந்தார். மேலும் 2024ல் நடைபெற்ற கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி அமையும் என தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று(நவ.7) செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் விளக்கமளித்தார். அதில், 2017ஆம் ஆண்டு என்னை துணை முதலமைச்சராக்கியது எடப்பாடி பழனிச்சாமி அல்ல எனவும், பிரதமர் மோடி தான் என்னை அந்த பதவிக்கு ஒப்புக்கொள்ள சென்னார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் பதவியை வழங்கிய சசிகலாவிற்கு கூட அவர் உண்மையாக இல்லை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும் போது ஜனநாயகத்திற்கு எதிராக செய்த செயல்களை பட்டியலிட்டு வைத்துள்ளேன். அதை நேரம் வரும் போது வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பதற்கு ஓபிஎஸ் தயாராகிவிட்டார் என அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஈபிஎஸ் அணி இல்லாத தனி நிர்வாகிகள் பட்டியலை மாவட்டம் தோறும் ஓபிஎஸ் வெளியிட்டு வருகிறார்.விரைவில் ஓபிஎஸ் தரப்பில் இருந்து நியமனம் செய்யும் நிர்வாகிகளை வைத்து போட்டி பொதுக்குழு நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேவர் ஜெயந்தி விழாவில் தென்மாவட்டத்தில் தானும் ஒரு சக்தி தான் என ஓபிஎஸ் நிரூபித்து உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நவம்பர் 21-ம் தேதி பொதுக்குழு தொடர்பான வழக்கும் விசாரணைக்கு வருகிறது. இது அனைத்தையும் வைத்து ஓபிஎஸ் போட்டிக்கு தயாராக உள்ளார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஓபிஎஸ்சின் நடவடிக்கைகளை ஈபிஎஸ் தரப்பினர் எதிர்கொள்வார்களா என கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ”நம்ப முடியாத திட்டத்தை இந்த ஆட்சியில் செயல்படுத்தி வருகிறோம்” - செந்தில் பாலாஜி