சென்னை: ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவில் ஆளுநர் மாளிகையில் அனைத்து கட்சியினருக்கும் தேநீர் விருந்து அளிப்பது மரபு. அதன் படி குடியரசு நாளான இன்று மாலை 4.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறவுள்ளது. ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குடியரசு நாளையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆளுநர் ரவி நேற்று முதலமைச்சர் ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தேநீர் விருந்துக்கு அழைத்ததாகத் தெரிகிறது.
மேலும் ஆளுநரின் செயலாளர் நேரில் வந்து முதலமைச்சருக்கு அழைப்பிதழை வழங்கினார். தொடர்ந்து இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஒரே மேடையில் ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.இந்த சூழலில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாலையில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்வார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கலாம் எனவும், திமுக சார்பிலும் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக மற்றும் பாஜக கண்டிப்பாகப் பங்கேற்கும் எனத் தெரிகிறது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சென்னையில் இல்லாத காரணத்தால், அதிமுக சார்பில் ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: Republic day: ஆளுநர் முன்பு அணிவகுத்த 'தமிழ்நாடு வாழ்க' அலங்கார ஊர்தி!