தமிழ்நாட்டில் சுகாதாரப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 16ஆம் தேதி தொடக்கப்பட்டது. 160 மையங்களில் கோவிஷீல்டு, 6 மையங்களில் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டிற்கு கோவிஷீல்டு தடுப்பூசி 10 லட்சத்து 45 ஆயிரமும், கோவாக்சின் தடுப்பூசி 1 லட்சத்து 89 ஆயிரம் வந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. முதல்கட்டமாக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 5 லட்சத்து 19 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்களின் விவரங்கள் ‘கோவின்’ ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் எந்த தேதியில், எந்த நேரத்தில், எந்த மையத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது. இருப்பினும் மருத்துவத்துறைப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போட்டுக் கொள்ள பலர் தயக்கம் காட்டியதால், நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட மருத்துவர்கள் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.
கடந்த ஜனவரி 23ஆம் தேதி வரையில் 59,226 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டங்களில் பதிவு செய்தவர்களில் மிகவும் குறைவாகவே போட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக பொது சுகாதரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:’கோவின் ஆப்பில் பதிவு செய்யப்பட்ட தேதியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு, மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் முன்னுரிமை வழங்கப்படாது. அவர்களின் பெயர்கள் பயனாளர்கள் பட்டியலில் இடம் பெறும். ஆனால் அவர்கள் வரும் தேதியில் வழங்கப்படாது.
தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு சுகாதாரப் பணியாளர்கள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் எந்த மாநிலம் முதலில் போடுகிறது என்பது இல்லை. அவர்கள் விரும்பும்போது போட்டுக் கொள்ளலாம். சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடிவடைந்தப் பின்னர், அடுத்ததாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிதொடங்கும்.
முன்களப் பணியாளர்கள் தங்களின் பெயர்களை வரும் 25ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அவர்கள் குறித்து விபரங்களை அந்தந்த துறைகளில் கணக்கெடுக்கும் பணி நடந்துவருகிறது’என்றார்.
குறிப்பிட்ட கால வரம்புக்குள் தடுப்பூசிகளை அனைவருக்கும் போட வேண்டும் எனத் தெரிவித்த சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், சமூக எதிர்ப்பு சக்தியை தடுப்பூசிகள் மூலம் பெற முடியும் எனக் கூறினார். தடுப்பூசிகள் கரோனா தடுப்பில் மகத்தான பங்காற்றும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. தடுப்பூசி வழங்குவதில் கூடுதல் கவனம் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,’இந்தியாவில் பயன்படுத்தப்படவுள்ள கோவிட் தடுப்பூசிகளின் திறன்,பாதுகாப்பு குறித்த ஆய்வுகளின் முடிவுகளை முழுமையாக வெளிப்படையாக வெளியிட வேண்டும். அது பல நாட்டு மருத்துவர்கள், உலக சுகாதார நிறுவனத்தின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். கோவிட் தடுப்பூசிகள் குறித்த முழுமையான விவரங்களை வெளியிடாமல், அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவந்ததால் மருத்துவர்கள் தயங்குகின்றனர். இது குறித்து நம்பிக்கை ஏற்பட்ட பின்னர் மருத்துவத்துறை பணியாளர்கள் முன்வர வாய்ப்புள்ளது’என்றார்.
இதையும் படிங்க:'வாழ நினைத்தால் என்னோடு வாருங்கள்’ - கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அர்னால்டு