சென்னை: சென்னை ஐஐடி பேராசிரியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ‘தமிழ்நாட்டில் தற்கொலையால் ஏற்படும் சமூக - பொருளாதார இழப்புகள்’ குறித்த ஆய்வு அறிக்கையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மார்ச் 15) வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய இயக்குநர் காமகோடி, “2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இதுவரை 3 தற்கொலைகள் சென்னை ஐஐடியில் நடந்துள்ளது. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. மாணவர்களுக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பு, அவர்களின் தனிப்பட்ட காரணங்கள், கல்வி அழுத்தம் மற்றும் பொருளாதார காரணங்கள் ஆகிய நான்கு காரணங்களால் தற்கொலைகள் நடந்துள்ளதாக கண்டறிந்தோம்.
ஆனால், தற்போது அதையும் மீறி மாணவர்களின் தற்கொலைக்குக் காரணங்கள் இருப்பதாக தெரிய வருகிறது. இது குறித்து முழுமையாக விசாரணை செய்து, தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். சென்னை ஐஐடியில் உள்ள பேராசிரியர்கள், மாணவர்கள் உடன் பேசி வருகின்றனர். கரோனா தொற்றுக்கு பின்னர் மாணவர்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற தற்கொலைகள் குறித்து முழுமையான விவரங்களை வெளியிடவும் திட்டமிட்டு வருகிறோம். மாணவர்களின் தற்கொலையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை ஐஐடியில் மாணவர்கள் - பேராசிரியர்கள் இடையே எந்தவித பாகுபாடும் இல்லாமல் நடந்து கொள்கின்றனர். மாணவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கவும் கலந்தாய்வு அளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.
முன்னதாக சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் பிடெக் 3ஆம் ஆண்டு படித்து வந்த மாணவன், வைபு புஷ்பக் ஸ்ரீசாய். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர், நேற்றைய முன்தினம் (மார்ச் 14) தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டூர்புரம் காவல் துறையினர், மாணவரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விடுதி ஊழியர்களிடத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் இது தொடர்பாக ஐஐடி கமிட்டி விரிவான விசாரணை நடத்தி வெளிப்படையான அறிக்கை வெளியிடப்படும் என சென்னை ஐஐடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் சென்னை ஐஐடியில் எம்.எஸ் எலக்ட்ரிக்கல் 2ஆம் ஆண்டு படித்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சன்னி ஆல்பட் (25), கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி, தான் தங்கி இருந்த விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். அதே நாள் மற்றொரு மாணவன் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். இவ்வாறு கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் ஆந்திர மாணவர் தற்கொலை - தொடரும் தற்கொலைகள் குறித்து போலீஸ் விசாரணை!