சென்னை: அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வன்னியருக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தக் கூடாது எனவும், அதை மீறி அரசு நடைமுறைப்படுத்தினால் தலைநகர் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம் எனவும் சமூக நீதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், மீறி நடைமுறைப்படுத்தினால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு எதிராக தீவிரப் பரப்புரை மேற்கொள்ளுவோம் எனவும் அக்கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சமூகநீதி கூட்டமைப்பின் நிர்வாகி அய்யநாதன், வழக்கறிஞர் ரஜினி ஆகியோர், "அரசியல் ஆதாயத்திற்காக, காட்சியில் எந்தவித புள்ளிவிபரங்களும் இல்லாமல் தேர்தல் அறிவிப்பதற்கு முன்னர் வன்னியர்களுக்கு 10.5விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராமதாஸ் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 115 சமூகங்கள் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் 21 சமூகத்திற்காக 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது தவறானது. எனவே, திமுக அரசு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தக்கூடாது. இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தால் அது சரியாக இருந்திருக்கும். ஆனால், அவ்வாறு செய்யாமல் அரசியல் ஆதாயத்திற்காக இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதனை திரும்பப்பெறவேண்டும்.
இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு எதிராக தீவிர பரப்புரையில், ஈடுபடுவோம்" என எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீடு வழங்க தடை விதிக்க முடியாது - மறுத்த உச்ச நீதிமன்றம்