உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. இத்தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது சமூக வலைதளக் கணக்குகளை இன்று ஒருநாள் மட்டும் பெண்களிடம் ஒப்படைக்கப்படும் என சில நாள்களுக்கு முன் தெரிவித்திருந்தார். அதற்கான பெண்களைத் தேர்ந்தெடுக்கும் பணியும் தொடங்கியது. அதன்படி, சாதரண நிலையிலிருந்து சாதனைப் பெண்களாக மாறியவர்கள் பிரதமரின் கணக்குகளைப் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டது.
பிரதமரின் கணக்குகளைப் பயன்படுத்த விரும்பும் பெண்கள் ட்விட்டரில் #SheInspiresUs என்ற ஹேஷ்டாக்கில் தாங்கள் செய்த சாதனைகள் குறித்து வீடியோ எடுத்துப் பதிவிடுமாறும் கூறப்பட்டது. பெண்கள் பலர் தாங்கள் செய்த சாதனைகள் குறித்து பேசிய வீடியோவை அந்த ஹேஷ்டாக்கில் பதிவிட்டனர்.
இதில், ஏழு பெண்களை மட்டும் தேர்வு செய்தனர். அவ்வாறு தேர்வான பெண்களின் விவரங்களை பிரதமர் மோடி, ட்விட்டரில் வெளியிட்டார். அதன் பின் தன்னுடைய கணக்குகளை அந்தப் பெண்களிடம் ஒப்படைப்பதாகக் கூறி வெளியேறிவிட்டார்.
பிரதமர் வெளியிட்ட பட்டியலில் முதல் பெயராக ’ஃபுட் பாங்க் இந்தியா’ (உணவு வங்கி) என்ற அறக்கட்டளை நிறுவனத்தை இயக்கும் பெண்ணான சினேகா மோகன்தாஸ் என்பவரின் பெயர் இருந்தது. வியப்பு என்னவென்றால் அந்தப் பெண் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
இவர்தான் பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து பதிவிட்ட முதல் பெண்மணி. இந்தப் பெருமையைப் பெற்றதால், படு ஜாலியாக இருந்த அவரிடம் நாம் பேசினோம். நாம் கேட்ட சில கேள்விகளுக்கு துள்ளலாகப் பதிலளித்தார்.
பிரதமரின் ட்விட்டர் கணக்கைப் பயன்படுத்தும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்ற கேட்டதற்கு அவர், “பிரதமர் மோடியின் ட்வீட்டை பார்த்து, என்னுடைய நிறுவனத்தில் வாலன்டியராக பணியாற்றும் நபர்தான் #SheInspiresUs என்ற ஹேஷ்டாக்கோடு என்னைப் பற்றிய விடியோவை ஷேர் செய்திருந்தார்.
அதைப் பார்த்த மற்ற வாலன்டியர்களும் அதனை ஷேர் செய்ததால், வைரலானது. அதன்மூலமாக பிரதமர் அலுவலகத் தரப்பு பிரதமரின் கணக்கை இயக்க என்னைத் தேர்வு செய்தது. அப்படித் தான் இந்த மிகப் பெரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது” என்றார்.
பிரதமரின் ட்விட்டரில் முதல் ட்வீட் போட்டது எப்படி ஃபீல் ஆகுது என்று கேட்டோம். “தேர்வான ஏழு பெண்களில் முதல் பெண்மணியாக நான் பிரதமர் கணக்கில் ட்வீட் செய்தது பெருமையாக இருந்தது. ஐந்து ஆண்டுகளாக நான் செய்துவரும் நல உதவிகளுக்கான பிரதிபலனாகவே இதைப் பார்க்கிறேன். அதுவும் குறிப்பாக மகளிர் தினத்தன்று இந்த வாய்ப்பு கிடைத்தது எனக்கு கூடுதல் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது” என்கிறார் சினேகா.
மற்ற பெண்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன? என்று கேட்டதற்குப் பதிலளித்த அவர், “ ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றி’ என்ற தாரக மந்திரமே என்னை ஐந்து ஆண்டுகளாக இயங்கச் செய்துள்ளது. பெண்கள் தன்னம்பிக்கையோடு விடாமுயற்சி செய்தால் அனைத்தும் சாத்தியமாகும். பெண்களுக்கு குடும்பம் மற்றும் சமூகத்தின் உதவியும் ஊக்கமும் மிக அவசியமாகும். அவ்வாறு செய்தால் பெண்களால் பல துறைகளில் சாதனை புரிய முடியும்” என்றார்.
இந்தியா முழுதும் செயல்பட்டு வரும் சினேகா மோகன்தாஸின் நிறுவனம், ஆதரவற்றவர்கள், சாலையோரத்தில் வசிப்பவர்கள், தஞ்சமடைந்தவர்கள் என உணவில்லாமல் வாழ்க்கையில் கஷ்டப்படும் அனைவருக்கும் மூன்று வேளை உணவளித்துவருகிறது.
‘பட்டினியை எதிர்த்துச் சண்டையிடுவோம்; பட்டினியில்லா தேசத்தை உருவாக்குவோம்’ என்ற நோக்கில் செயல்படும் ஃபுட் பாங்க் இந்தியாவின் நிறுவனர் சினேகா மோகன்தாஸுக்கு சமூக வலைதளவாசிகள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். இறுதியில், நாமும் வாழ்த்து தெரிவித்து அங்கிருந்து விடைபெற்றோம்.
இதையும் படிங்க: மோடியின் ட்விட்டரில் சென்னை பெண்!