சென்னை: 2022 ஜனவரி முதல் தேதியில் இருந்து 2022 டிசம்பர் 31ஆம் தேதி வரை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில், ரூ.94.22 கோடி மதிப்பிலான 205.84 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க கடத்தல்கள் சம்பந்தமாக 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட 97 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கக் கடத்தல்: அதிகமாகத் துபாய், சார்ஜா, குவைத், சவுதி அரேபியா, இலங்கை உட்பட வளைகுடா நாடுகளிலிருந்து அதிகமான தங்கங்கள் கடத்தப்பட்டுள்ளன. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டில், பெண்கள் தலை முடி கூந்தலுக்குள் தங்கத்தை மறைத்துக் கொண்டு வருவதும், பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வருவது, தங்கத்தை பவுடராக்கி குங்குமம் பொடிக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வருவது போன்ற கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடந்தன.
இதே போல் சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்குக் கடத்த முயன்ற ரூ. 10.97 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வெளிநாட்டு கரன்சி கடத்தல் சம்பவங்களில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![தங்க கடத்தல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-spl-2022hijackingatchennaiairport-script-photo-7208368_11012023194621_1101f_1673446581_1016.jpg)
போதைப் பொருள் கடத்தல்: இதனைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து சென்னைக்குக் கடத்தி வந்த ரூ.14 கோடி மதிப்பிலான 27.66 கிலோ ஹெராயின், மெத்தகுலோன், கொகைன் ஆகிய போதைப் பொருட்களை சுங்கத்துறையினர் கடந்த ஆண்டு சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டில் சென்னை விமான நிலையத்தில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 கடத்தல் ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போதைப் பொருட்கள் உகாண்டா, தான்சானியா, வெனிசுலா, எத்தியோப்பியா மற்றும் கென்யா நாட்டைச் சேர்ந்தவர்கள், சார்ஜா மற்றும் எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான, அடிஸ் அபாபாவில் இருந்து கடத்தி வந்துள்ளனர். இந்தப் போதைப் பொருள் கடத்தலில் வெளிநாட்டுப் பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![போதை பொருள் கடத்தல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-spl-2022hijackingatchennaiairport-script-photo-7208368_11012023194621_1101f_1673446581_351.jpg)
அரிய வகை விலங்குகள் மற்றும் கற்கள் கடத்தல்: இது தவிர வெளிநாடுகளிலிருந்து, டாமரின் குரங்குகள், மலைப்பாம்பு குட்டிகள், நரிக்குட்டிகள்,விஷ தேள்கள், விஷ பாம்புகள், ஆமைகள் உட்பட, 134 அரிய வகை வன விலங்குகள், 2022 ல் சென்னைக்குக் கடத்தி வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக, 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவை பெரும்பாலும் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் இருந்து கடத்தப்பட்டுள்ளன. அனைத்து அரிய வகை உயிரினங்களும் எந்த நாட்டில் இருந்து வந்ததோ அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டன.
மேலும், ரூ. 1.26 கோடி மதிப்பிலான 5,274 காரட் வைர கற்கள் மற்றும் நவர ரத்தினங்கள் கடத்தப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ஒரு புத்தர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ. 3.90 கோடி மதிப்பிலான சிகரெட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
![அரிய வகை பாம்புகள் கடத்தல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-spl-2022hijackingatchennaiairport-script-photo-7208368_11012023194621_1101f_1673446581_801.jpg)
வெளிநாட்டு கரென்சி மற்றும் மின் பொருள்கள்: வெளிநாடுகளிலிருந்து மின்னணு சாதன பொருட்கள் சென்னைக்குக் கடத்தி வரப்படுவது பெரிய அளவில் குறைந்துவிட்டது. அதேபோல் சென்னையிலிருந்து வெளிநாட்டிற்கு அடிக்கடி கடத்தப்படும் நட்சத்திர ஆமைகள் கடல் குதிரைகள் மயில் இறகுகள் போன்றவைகள் கடத்தலும் பெருமளவு குறைந்து விட்டன.
அதைப்போல் சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டு பிடிப்பட்ட கரன்சி கடந்த 2021 ஆம் ஆண்டில் ரூ. 9 கோடியாக இருந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் ரூ. 10.98 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
![வெளிநாட்டு கரன்சி கடத்தல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-spl-2022hijackingatchennaiairport-script-photo-7208368_11012023194621_1101f_1673446581_175.jpg)
மொத்த விவரங்கள்: கடந்த 2021 ஆம் ஆண்டில் சென்னை விமான நிலையத்தில் ரூ. 70.12 கோடி மதிப்புடைய 157 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் அது ரூ. 94. 22 கோடி 205 கிலோவாக அதிகரித்துள்ளது.
சென்னை விமான நிலையத்திலிருந்து போதைப் பொருள் கடத்தல் 2021 ஆம் ஆண்டில் ரூ. 11 கோடி மதிப்பில் ஹெராயின் மெத்தோ குயிலோன் பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்கள் பிடிபட்டன. ஆனால் 2022 ஆம் ஆண்டில் ரூ. 14 கோடியாக அதிகரித்துள்ளது.
2022ல் மட்டும், ரூ. 124.88 கோடி மதிப்பிலான தங்கம், போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 122 கடத்தல் ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கணிசமான பேர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை மட்டுமின்றி மத்திய வருவாய் புலனாய்வு துறை, மத்திய போதை தடுப்பு பிரிவு துறை, உள்ளிட்ட மேலும் சில அமைப்புகளும் திடீர் சோதனைகள் நடத்தி, கடத்தல் தங்கம், போதைப் பொருட்கள், கரன்சி போன்றவற்றைப் பெரிய அளவில் பறிமுதல் செய்வது வழக்கம். ஆனால் தற்போது சுங்கத்துறை மட்டுமே தாங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டில் பிடித்த கடத்தல் பொருட்கள் பற்றிய விவரங்களைத் தெரிவித்துள்ளனர்.
மத்திய வருவாய் புலனாய்வுத் துறை, மத்திய போதை தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் இதுவரையில் தாங்கள் பிடித்த கடத்தல் பொருட்களின் விவரங்களை தெரிவிக்கவில்லை. அவர்களும் தெரிவித்தால் சென்னை விமான நிலையத்தில் கடத்தல் பொருட்கள் பிடிபட்ட அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: லேப்டாப் சார்ஜர்களில் நூதன முறையில் தங்கம் கடத்தல்.. குருவி சிக்கியது எப்படி?