துபாயிலிருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது, ராமநாதபுரத்தைச் சோ்ந்த சாதிக் அப்துல் மன்னன் (46), அப்துல் ரசீத் (34) ஆகிய இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருவரின் உடைமைகளைச் சோதனை செய்ததில், அவர்கள் மறைத்துவைத்திருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான 240 கிராம் தங்கம், ரூ.10 லட்சம் மதிப்பிலான 12 ஐபோன்கள், வெளிநாட்டு சிகரெட்கள், 11 லேப்டாப்கள் சிக்கியுள்ளன.
மொத்தமாக ரூ.22 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருள்களைப் பறிமுதல்செய்த சுங்கத் துறையினர், இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.