சென்னை: போதைப்பொருள் கடத்தும் கும்பல் எழும்பூர் ரயில் நிலையம் வழியாக போதைப்பொருட்களை கடத்தி வருவதாக வடபழனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து எழும்பூர் ரயில் நிலையத்தில் மாறுவேடத்தில் நின்று போலீசார் கண்காணித்தனர்.
அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த ரயில் பயணிகளை கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் (20) மற்றும் அவருடன் இருந்த 15 வயது சிறாரையும் பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளனர்.
இதனால் இருவரிடமும் நடத்தப்பட்ட சோதனையில் 15 வயது சிறுவனிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். சந்தோஷிடமிருந்து ஆசிஸ் ஆயில் என சொல்லக்கூடிய கஞ்சா ஆயிலையும் பறிமுதல் செய்தனர். சந்தோஷ் பெரும்பாக்கத்தில் பெயிண்டராக வேலை பார்த்து வருவதும் முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
போலீஸ் விசாரணையில், ஒரிசாவில் இருந்து கஞ்சாவானது கடத்தி விசாகப்பட்டினத்துக்கு வரவழைக்கப்பட்டதாகவும், பின்னர் அங்கு இருந்து, சிறுவனிடம் 3 கிலோ கஞ்சா போதைப்பொருளை கொடுத்து விசாகப்பட்டினத்திலிருந்து ரயில் மூலமாக கஞ்சாவை கடத்தி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்ததும் தெரிய வந்துள்ளது.
சிறுவர்களை போலீசார் சோதனை செய்ய மாட்டார்கள் என்பதால், சிறுவனிடம் கஞ்சாவை கொடுத்து கடத்தி வந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர் விசாரணையில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்து வரும் திலீப் குமார் தான் இதன் பின்னணியில் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
திலீப் குமாரின் ஐடியா படி தான் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வரும் சந்தோஷூம், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனிடம் பணம் கொடுத்து ஆந்திரா சென்று ஊர் சுற்றி பார்த்து வாருங்கள். வரும்போது உங்களிடம் ஒரு பார்சல் கொடுக்கப்படும் அதை சென்னைக்கு கொண்டு வாருங்கள் என சினிமா பாணியில் தீலிப் குமார் தெரிவித்திருக்கிறார்.
இலவசமாக ஊர் சுற்றி பார்க்க போகிறோம் என ஆசைப்பட்ட சந்தோஷூம் 15 வயது சிறுவனும் ஊர் சுற்றி பார்த்து விட்டு, தங்களிடம் கொடுக்கப்பட்ட பார்சலை என்ன.. ஏது.. என்று அறியாமல் ரயிலில் கொண்டு வந்து போலீசாரிடம் சிக்கி உள்ளனர். ரயிலில் கடத்திவரப்பட்ட கஞ்சாவை வாங்குவதற்காக ரயில் நிலையத்தினுள் காத்திருந்த திலீப், சந்தோஷூம் சிறுவனும் போலீசாரிடம் பிடிபட்டதை அறிந்து அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்.
தொடர் விசாரணையில் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த திலீப் குமார், நங்கநல்லூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி உட்பட நான்கு பேரை வடபழனி போலீசார் கைது செய்தனர். இதில் 15 வயது சிறுவன் இளஞ்சிறார், என்பதால் அவரை அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.