சென்னை: கிண்டியில் மின்சார ரயிலில் திடீரென கரும்புகை வந்ததால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரயில் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நேற்று (அக். 1) காலை காலை 10.30 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
மதியம் 3 மணிக்கு பிறகு மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. காலை முதல் மாலை வரை ரயில் இயக்கப்படாததால் மாலை நேரத்தில் மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி நேற்று (அக். 1) மாலை மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது.
கிண்டி ரயில் நிலையம் அருகே மெதுவாக வந்த ரயிலின் நடுவில் உள்ள பெட்டியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனால் ரயில் பெட்டியில் தீப்பிடித்து விட்டதாக நினைத்த பயணிகள் கூச்சலிட்டனர். உடனடியாக மின்சார ரயில் நிறுத்தப்பட்ட நிலையில் பயணிகள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு கீழ் இறங்கினர்.
இதனால் கிண்டி ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் கடல் அலை போல் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது மின்சார ரயிலின் பிரேக் பாய்ண்ட்டில் பழுது ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பிரேக் பாய்ண்டில் பழுது காரணாமாக புகை வந்ததாகவும், அந்த பழுது சரி செய்யப்பட்ட பின்னர் சுமார் 15 நிமிடங்களில் ரயில் மீண்டும் இயக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் கிண்டி ரயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க: வாஷிங்டனில் களைகட்டிய உலக கலாச்சார விழா.. 180 நாடுகளை சேர்ந்த 10 லட்சம் மக்கள் பங்கேற்பு!