சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக நகராட்சி நிர்வாக துறை செயலாளர், சென்னை மாநகராட்சி மேயர், ஆணையர், மாநகராட்சி உயர் அதிகாரிகள், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் கே.என். நேரு ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்து கவனித்து வருகிறார். சென்னையில் பல்வேறு வகையிலான நிதிகள் கொண்டு மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
608 கோடி ரூபாய் மதிப்பில் 179 கி.மீ., நீளத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கு பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இதேபோல் கோவளம், கொசஸ்தலை ஆற்று பகுதிகளை இணைக்கும் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி 1173.88 கி.மீ., நீளத்திற்கு 5ஆயிரத்து 54 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறுகிறது.
இதேபோல் ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால் கால்வாயினை மேம்படுத்தி, தூர்வாரும் பணியானது 90 கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 85 கி.மீ., நீளத்திற்கு நடைபெற்று வருகிறது. சென்னையில் ஆயிரம் கி.மீ., நீளத்திற்கு மேல் ஒரே நேரத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த ஆட்சியில் 38 இடங்களில் மட்டுமே வெள்ளநீர் தேங்குவதாக கூறப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு பெய்த மழையில் 564 இடங்களில் மழைநீர் தேங்கியது. இதற்கு நிரந்தர தீர்வு காண திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரை அடிப்படையில் ஐஐடி-யின் உதவியுடன் அறிவியல் பூர்வகமாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
![தலைமைச் செயலகத்தில் நடந்த வளர்ச்சி பணிகள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கே.என்.நேரு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-knnehru-7209106_08072022141127_0807f_1657269687_57.jpg)
மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். நகராட்சி துறையில் ஊழல் குற்றச்சாட்டு உள்ள அதிகாரிகளை விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊழலிற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட்சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கையை ஒருநபர் ஆணையர் வழங்கிய பின்னர் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் “ என்றார்.
இதையும் படிங்க: ‘தமிழ்நாட்டை எத்தனையாக பிரித்தாலும் திமுக தான் ஆட்சியில் இருக்கும்’ - அமைச்சர் ஐ. பெரியசாமி