சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து காவல் துறையினருக்கான நவீன ரோந்து வாகனம், மது அருந்திக்கொண்டு வாகனம் ஓட்டும் பெண்களைப் பிடிக்க, போக்குவரத்து பெண்கள் தனிப்படை ஆகியவற்றின் தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து போக்குவரத்து காவல் துறையினரின் ரோந்து பணிகளை எளிமையாக்கும் பொருட்டு நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்ட நவீன ரோந்து வாகனங்களும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இந்தப் போக்குவரத்து பெண்கள் தனிப்படை காவல் துறையினர், மது அருந்தி வரும் பெண்கள் மட்டுமில்லாமல் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக சென்னையில் நான்கு தனிப்படைகள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஸ்வநாதன், சென்னையில் போக்குவரத்து காவல் துறையினரின் ரோந்து பணிகளை எளிமைபடுத்தும் வகையில் நவீன ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பெண்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், பெண்கள் போக்குவரத்து தனிப்படை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில்லாமல் உணரும் பட்சத்தில் காவல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள 75300-01100 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும், Chennai city police என்ற முகநூல் குறுஞ்செய்தி மூலமாகவும், dccwc.chennai@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும் காவல் துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கலாம் என்று கூறினார்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் கழிவுகளுக்கு இலவச உணவு வழங்கும் புபனேஷ்வர் மாநகராட்சி!