தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்துவரும் மாணவர்களின் விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டு 66 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கார்டின் மூலம் மாணவர்களின் முழு விவரத்தையும் அறிய முடியும்.
இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றிவரும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு அவர்களின் தகவல்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டு சுமார் மூன்று லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "அனைத்து வகையான அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், பள்ளிக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்குப் புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் (Smart Card) அச்சிடும் பணிகள் முடிவுற்று 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்களும் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.